மனைவி கள்ளக்காதல்: விடியற்காலை தனிமையில் இருந்த இருவரையும் வெட்டிக்கொன்ற கணவர்

தூத்துக்குடி மாவட்டத்தில், மனைவியையும் கள்ளக்காதலனையும் 3 செல்போன்களின் கேமராக்கள் பதிவு மூலமாக கையும் களவுமாகப் பிடித்த கணவர், கள்ளக்காதலனின் தலையை துண்டாக வெட்டியதோடு மனைவியையும் வெட்டிக் கொலை செய்துள்ளார். 14 கி.மீ. துாரம் நடந்தே சென்று காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் 58 வயதான சண்முகம் - 45 வயதான மாரியம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.


சண்முகம், மேளக் கலைஞர் என்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவார்; வேலையில்லாத நாட்களில் சென்னைக்கு கட்டிடத் தொழிலில் வேலை செய்ய சென்று விடுவார்.சண்முகத்தின் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் 28 வயதான ராமமூர்த்தி. ஊராட்சி மன்றத்தில் தண்ணீர் திறந்து விடும் பணிகளைச் செய்து வந்தார். அது தவிர கட்டிட வேலைக்கு செல்வது, வீடுகளில் ஏற்படும் மின்பழுதுகளை சரி செய்வது, ஊர் மக்களுக்கு உதவி செய்வது என பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.


 


கிராமத்தினருக்கு பல உதவிகளை செய்து வந்ததால் ராமமூர்த்திக்கு ஊரில் நல்ல பெயர் இருந்துள்ளது.


 


இந்த நிலையில் சண்முகம் மனைவி, 45 வயதான மாரியம்மாளுக்கும் ராமமூர்த்திக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது; இருவரும் சண்முகம் இல்லாத வேளையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.


 


இதைக் கண்டறிந்த சண்முகம், இருவரையும் கண்டித்துள்ளார். இருவருமே அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு, சாமி படங்களின் முன்னால் சூடம் கொளுத்தி சத்தியமும் செய்தனர்.


 


அதை நம்பிய சண்முகம் பிரச்னையை அதோடு விட்டு விட்டார். அதேநேரம் வங்கி உதவி எனக் கூறி இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இதனால் மீண்டும் சண்முகம் குடும்பத்தில் பிரச்னை எழுந்துள்ளது.


 


குடும்பப் பிரச்னை கிராம பஞ்சாயத்திற்கு வர, ராமமூர்த்தி நல்லவர் என்றும் கணவர் தான் தன் மீது சந்தேகப்படுவதாகவும் மாரியம்மாள் நாடகமாடியுள்ளார்.


 


இதனால் கிராமத்தினர் சண்முகத்தை சத்தம் போட்டுள்ளனர். சண்முகம் மனமுடைந்த விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டார். இருந்தாலும், சண்முகத்தின் மனதின் அடியாழத்தில் சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. ஆதாரத்துடன் இவர்களின் கள்ளக்காதலை நிரூபிக்க முடிவு செய்தார்.


 


சமீபத்தில் சென்னைக்கு சென்ற அவர், நண்பர்களின் உதவியுடன் செல்போனில் திரில்லர் படங்களைப் பார்த்து, புலனாய்வு செய்வது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டார்.


 


விலையுயர்ந்த 3 செல்போன்களை வாங்கிய சண்முகம், வீட்டிற்கு வந்து, வீட்டின் நேரெதிரில் உள்ள சிறிய கூடாரத்தில் ஒன்றையும் வீட்டருகில், தெர்மாகோலில் ஒன்றையும் வீட்டினுள்ளே ஜன்னலில் ஒரு செல்போனையும் மறைத்து வைத்துள்ளார்.


 


சண்முகம் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், இருவரும் உல்லாசமாக இருப்பதும் அந்த செல்போன்களில் பதிவாகியுள்ளன. அந்தக் காட்சிகளை ஊராரிடம் காண்பித்து கள்ளக்காதலர்களைத் தண்டிக்க வேண்டும் என சண்முகம் திட்டமிட்டிருந்தார்.


 


இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளார் சண்முகம். நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டிற்குள் வந்த ராமமூர்த்தி, மாரியம்மாளுடன் தனிமையில் இருந்துள்ளார்.


 


வீட்டிற்குள் வேற்று மனிதரின் சத்தம் கேட்கவே, துாக்கம் கலைந்து எழுந்த சண்முகம், அதிகாலை 3.00 மணியளவில் உள்ளே பார்த்தபோது மனைவியும் ராமமூர்த்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.


 


வெறிகொண்ட சண்முகம், அங்கிருந்த அரிவாளை எடுத்து, ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டிப் படுகொலை செய்தார். பயத்தில் உறைந்து போய் இருந்த மனைவி மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.


 


இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாகக் கிடக்க, 14 கிலோ மீட்டர் துாரம் நடந்தே சென்ற சண்முகம், பசுவந்தனை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


 


ரத்தக் கறைகளுடன் வந்த சண்முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி நடந்ததைத் தெரிந்து கொண்டனர். பின்னர் காலையில் வீட்டிற்கு சென்று சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


 


சண்முகம் அங்கங்கே மறைத்து வைத்திருந்த செல்போன்களையும் போலீசார் மீட்டனர். சண்முகம் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.


 


தற்பொழுது வரை அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி இப்படி நடந்து கொண்டாரா? என ஆச்சரியத்துடன் நம்ப முடியாமல் கேள்வி எழுப்புகின்றனர்.


 


ராமமூர்த்தி குடும்பத்தினர் ராமமூர்த்தி நல்ல பையன், எந்த தவறும் செய்ய மாட்டார், சந்தேகப்பட்டு சண்முகம் தான் அடிக்கடி அவரது மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம், அதை தான் ராமமூர்த்தி தடுக்க செல்வார் என்றும் கொலை நடந்த அன்றும் அப்படி்ததான் நடந்தது என்றும் தெரிவிக்கின்றனர், அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்