முஸ்லிம்கள் மட்டும் வரல தமிழ் பேசும் இந்துக்கள் , கிறிஸ்துவ மற்றும் சமூக முற்போக்கு தோழர்களும் வந்தார்கள் ,
மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
அதற்கு எதிரான போராட்டங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகவும் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். ஷாகின் பாக் என்பது சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களின் அடையாளமாகவே மாறி வருகிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் ஷாகின் பாக் போராட்டம் பா.ஜ.க-வால் பேசு பொருளாக்கப்பட்டது.இந்த நிலையில் கடந்த வாரம் ஷாகின் பாகைப் போலவே சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.
சென்னையின் ஷாகின் பாக் என்றே இந்தப் போராட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
அந்தப் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை அடக்குமுறையான வழிகளைக் கையாண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தின. தமிழக சட்டமன்றத்திலும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் என்.பி.ஆரை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்குத் தடை வழங்கப்பட்டது.
தடையை மீறிப் போராட்டம் நடத்தப்படும் எனப் போராட்டக் குழுவினரால் அறிவிக்கப்பட்டது. நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சி.ஏ.ஏ-வுக்குத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அறிவித்துவிட்டார்.
மேலும் அவர், ``சி.ஏ.ஏ-வால் தமிழகத்தில் பிறந்த எந்த இஸ்லாமியராவது பாதிக்கப்பட்டுள்ளார் என்று நிரூபிக்க முடியுமா? குடியுரிமை என்பது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரக்கூடியது.
மாநில அரசு அந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன” என்றும் பேசினார்.
போராட்டத்துக்குத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடற்கரை சாலைக்கான வழிகள் முடக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்தில் இஸ்லாமிய கட்சிகளோடு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன. வாலாஜா சாலையில் அண்ணா சிலை தொடங்கி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பரவலாகக் கலந்து கொண்டனர். 10 மணிபோல தொடங்கிய போராட்டம் 12 மணிக்கு நிறைவடைந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் சி.ஏ.ஏ, மத்திய பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளைக் கண்டித்துப் பேசினர்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு பேசுகையில், ``குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சட்டங்கள் அனைவருக்கும் ஆபத்தானதாகவே அமையும். சி.ஏ.ஏ சட்டம் இந்திய அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக உள்ளது. 1930-களில் நாஜி ஜெர்மனியில் ஹிட்லர் இயற்றிய நியூரம்பர்க் சட்டத்தைப் போன்றதே இந்த சி.ஏ.ஏ சட்டம். ஊருக்குள் புகுந்த பாம்பு போன்றதுதான் சி.ஏ.ஏ சட்டம்.
பாம்பை வெளியேற்றுவதை விட்டுவிட்டு பாம்பினால் யார் இறந்தார்கள் என்கிற பட்டியலைக் கேட்கிறார் முதல்வர்” என்றார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன் பேசுகையில்,
``சி.ஏ.ஏ குடியுரிமை வழங்குகிற சட்டம் அல்ல. என்.ஆர்.சி-யோடு சேர்த்தால் மக்களின் குடியைக் கெடுக்கின்ற சட்டமே இது. நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க சி.ஏ.ஏ-வை ஆதரித்து தவறு செய்துவிட்டனர்.
ஆனால், மக்கள் எதிர்ப்பைப் பார்த்து பின்வாங்கிய நிதிஷ்குமார் போலாவது தற்போது சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-யை நிராகரிக்க முன்வர வேண்டும்” என்றார்.நாகப்பட்டினம்
எம்.எல்.ஏ தமிமும் அன்சாரி பேசுகையில், “நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ-வை ஆதரித்து அ.தி.மு.க மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது.
அந்தத் தவறுக்குப் பரிகாரம் தேடும் விதத்திலாவது தற்போது சி.ஏ.ஏ-வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க முன்வர வேண்டும். ஆடிட்டர் சொல்வதைக் கேட்கின்ற நிலைக்கு அ.தி.மு.க வந்துவிட்டது பரிதாபமானதுதான்.
நாங்கள் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தவுடனே நீதிமன்றத்தின் மூலம் தடைவிதிக்கின்றனர்.
நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நாங்கள் அறிவோம். தற்போது காவல்துறைதான் சட்டமன்றத்தை முற்றுகையிட்டுள்ளது” என்றார்.போராட்டத்தின் முடிவில் சி.ஏ.ஏ-வை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்றும் என்.பி.ஆரைச் செயல்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இறுதியாக தேசிய கீதம் முழங்க போராட்டம் நிறைவுற்றது. போராட்டத்தில் எந்த அரசியல் கட்சிகளின் கொடியும் இல்லாமல் தேசியக் கொடியாக பரவலாகத் தென்பட்டன.