அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இதைத் தொடர்ந்து, 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.


சென்னை ராஜாஜி சாலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மைதானத்தில் மகிழ மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.



அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பூங்காக்களில், மகிழம், ஆலமரம், இலுப்பை, வேம்பு, பூவரசம், புன்னை, மந்தாரை, புங்கன் உட்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றி பேசிய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் வாயிலாக இதுவரை தமிழகத்தில் 4 கோடியே 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



சென்னை தலைமை செயலகத்தில், பெண் குழந்தை பாதுகாப்பு நாளை முன்னிட்டு, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்றார்.


அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத 21 வயதை நிறைவு செய்த பெண்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.



தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


இதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து அதிமுக தலைமையகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினர்.


ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.


கட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இருவரும் வழங்கினர். ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி , கேக் மற்றும் இனிப்புகளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினர்.


இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.


முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் அதிமுக அலுவலகம் வந்தபோது மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை முழுவதும் அதிமுகவின் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்