சமூக விரோத கூடாரமாக வனத்துறை குடியிருப்பு

குன்னுார் டைகர்ஹில் பகுதியில் உள்ள வனத்துறை குடியிருப்பு சமூக விரோத கூடாரமாக மாறி வருகிறது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட டைகர் ஹில் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளது.


இதனால் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு, வனவிலங்குகள் வருகின்றன. இங்கு வனப்பகுதி அருகில் டைகர் ஹில் சாலையில், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் இரு குடியிருப்புகள் கட்டப்பட்டது. இங்கு வனவர் உள்ளிட்ட வனத்துறையினர் தங்கி, சுற்றுப்புற பகுதிகளில், கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.


இந்நிலையில், சமீப காலமாக இந்த குடியிருப்புகளில் யாரும் இல்லாததால், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வருகிறது.சுற்றுப்புற பகுதிகளில் குடிமகன்களும் மது அருந்தி பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்கின்றனர்.


பின்பகுதியில் உள்ள கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் உள்ளதால், வனவிலங்குகள் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இதனை ஆய்வு செய்து, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.