சிட்கோ நிலம் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு

சிட்கோ நிலம் அபகரிப்பு வழக்கை, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை, சைதாபேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முகாந்திரம் இருப்பின் வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டதன்பேரில், மா.சுப்ரமணியன் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.


இந்நிலையில், மா.சுப்ரமணியம் எம்எல்ஏவாக உள்ளதால் அவருக்கு எதிரான வழக்கை, எம்பி -எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற கோரி மனுதாரர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு கருத்தை நீதிபதி கேட்டார், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவதில் ஆட்சேபம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து வழக்கை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளருடன் கலந்தாலோசிப்பதாக தெரிவித்த நீதிபதி மனு குறித்து சிபிசிஐடி போலீஸார், மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனா உள்ளிட்டோர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.