வெறுப்பை விதைக்க நினைத்த பா.ஜ.க - டெபாஸிட்டை காலி செய்து விரட்டிய வாக்காளர்கள்

டெல்லியில் ஷாஹீன்பாக், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒடுக்கத் தவறியதாக பா.ஜ.க கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது. ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களுக்கு கெஜ்ரிவால் அரசு துணைபோவதாகவும் குற்றம்சாட்டியது பா.ஜ.க.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களையும், போராட்டங்களின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் சுட்டிக்காட்டி, டெல்லி அரசின் மீது சட்டம் ஒழுங்கு சீர்கேடு புகார் சுமத்தி வாக்குகளைப் பெறவும் திட்டமிட்டனர் பா.ஜ.க தலைவர்கள்.


ஒரு கூட்டத்தில் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷா, “டெல்லி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை சத்தமாக அழுத்துங்கள். ஷாஹீன்பாக்கில் மின்சாரம் தாக்கினால் எப்படி அதிருமோ அப்படி அதிர வேண்டும்” என்றார்.


மேலும், அமித்ஷா தனது பல கூட்டங்களில் "நீங்கள் ஷாஹீன் பாக் மக்களுடன் இருக்கிறீர்களா அல்லது பாரத் மாதா என்ற முழக்கத்தை எழுப்பியவர்களுடன் இருக்கிறீர்களா என்று இந்தத் தேர்தலின் மூலம் பதில் சொல்லவேண்டும்” என்று முழங்கினார்.


டெல்லியின் போராட்டக்களமாகியிருக்கும் ஷாஹீன்பாக், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவை அமைந்திருக்கும் தொகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஓக்லா தொகுதி. பா.ஜ.கவின் திட்டமிட்ட பிரச்சார யுக்திகளை மீறி ஓக்லா தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானதுல்லா கான்.


இத்தொகுதியில் 1,06,780 வாக்குகளைப் பெற்றுள்ளார் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானதுல்லா கான். அதாவது, பதிவான வாக்குகளில் 83.81% வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பரம்சிங் வெறும் 15,697 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாஸிட் இழந்துள்ளார். இதன்மூலம் டெல்லியிலேயே மிக அதிகமாக 88,497 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் அமானதுல்லா கான்.


இதுகுறித்து ஓக்லா தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ள அமானதுல்லா கான் கூறுகையில், “பா.ஜ.கவுக்கும் அமித்ஷாவுக்கும் டெல்லி மக்கள் ஹை வோல்டேஜ் கரன்ட் ஷாக்' கொடுத்துள்ளனர். உழைப்பே உயர்வைத் தரும். வெறுப்பு அரசியல் என்றைக்கும் தோற்கும்” என பதிலடி கொடுத்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு