சிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; ட்ரம்ப் பேட்டி

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரம், டெல்லியில் நடந்துவரும் கலவரம் எல்லாம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘நமஸ்தே ட்ரம்ப்’, சபர்மதி ஆசிரம நிகழ்ச்சிகளை முடித்த ட்ரம்ப், ஆக்ரா சென்று தாஜ்மஹாலைப் பார்த்து ரசித்தார்.


2-வது நாளான இன்று, அதிபர் ட்ரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின், பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே 300 கோடி டாலர் அளவுக்கு பாதுகாப்புத்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.


இதன்பின், அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சிஏஏ விவகாரம், டெல்லி கலவரம், மதச் சுதந்திரம், முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


அப்போது ட்ரம்ப் கூறியதாவது:


''டெல்லி கலவரத்தைப் பற்றிக் கேட்டறிந்தேன். அதுகுறித்து பிரதமர் மோடியிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தவில்லை. அது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை.


இந்தியாவில் மதச் சுதந்திரம் குறித்து நானும், பிரதமர் மோடியும் பேசினோம். பிரதமர் மோடி, தனது மக்களுக்கு மதச் சுதந்திரம் வேண்டும் என்று விரும்புகிறார்.


இந்தியாவும், தானும் மக்களுக்கு மதச் சுதந்திரம் கிடைப்பதற்காகக் கடினமாக உழைப்பதாகத் தெரிவித்தார். நீங்கள் மற்ற நாடுகளோடு திரும்பிப் பார்க்கையில், இந்தியா மதச் சுதந்திரத்துக்காக உண்மையில் கடினமாக உழைக்கிறது.


குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நான் பிரதமர் மோடியிடம் பேசவில்லை. அதுகுறித்து விவாதிக்கவும் இல்லை. அதை இந்தியாவிடமே விட்டுவிட்டேன், அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.


இந்திய மக்களுக்காக நிச்சயம் மோடி நல்ல விஷயங்களைச் செய்வார் என நம்புகிறேன்.


முஸ்லிம்கள் குறிப்பாகப் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்களா என்பது குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். முஸ்லிம்கள் குறித்து மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் அவ்வாறு நடத்தப்படுகிறார்களா என்றும் கேட்டேன்.


ஏராளமானோர் முன் நீண்டநேரமாக மதச் சுதந்திரம் குறித்துப் பேசியபோது பிரதமர் மோடியிடமிருந்து வலிமையான பதில் எனக்குக் கிடைத்தது.


அது மிகவும் வலிமையான பதில் என நினைக்கிறேன். முஸ்லிமக்ளுடன் நெருங்கமாகத் தான் பணியாற்றுவதாக பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார். 1.40 கோடியாக இருந்த முஸ்லிம்கள் இன்று 20 கோடியாக உயர்ந்திருக்கிறார்கள்''.இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்