அதிமுகவினர் வெளியிட்ட நோட்டீஸால் பரபரப்பு
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்து விட்டதாக அவரது கட்சிக்காரர்களே துண்டு நோட்டீஸ் வெளியிட்டு உள்ளனர். அத்துடன் இவரை நீக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டுமானால் துரைக்கண்ணுவை நீக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ரெங்கசாமி அமமுகவுக்கு சென்று விட்டதால் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
வடக்கு மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்தில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. வடக்கு மாவட்டத்திலும் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவே ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட செயலாளரான வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த கூட்டத்திற்கு வரும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் துண்டு நோட்டீஸ் வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
அதிமுக தலைமையே திரும்பிப்பார். உள்ளாட்சித்தேர்தலில் தோல்விக்கு காரணம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் செயல்பாடு இல்லாததுதான். ஜாதிக்காரனாக பார்ப்பது, 500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது. இவை தான் காரணம். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா? தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வேளாண்மை அமைச்சர் மீது நடவடிக்கை எடு. இவண் இதர ஜாதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த துண்டு நோட்டீஸ் வடக்கு மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்களிடம் வினியோகிக்கப்பட்டது. இந்த தகவல் அமைச்சருக்கும் தெரியவந்து விட்டதாம். அமைச்சர் கூட்டத்துக்கு வரும்போதும் கூட்ட மண்டபத்தில் துண்டு நோட்டீஸ் கொடுக்கவும் அதிமுகவினர் திட்டமிட்டு உள்ளனர். உளவுத்துறை மூலம் இந்த தகவல் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவர் கூட்டத்துக்கு வருவாரா என்பது இன்று பிற்பகலில் தெரியவரும். அமைச்சரும், மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணுவுக்கு எதிராக அதிமுகவினரே கிளம்பி உள்ளதால் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.