உள்ளாட்சி உங்கள் ஆட்சி ....உள்ளாச்சியின் செயல்பாடுகள்

ஓர் அரசாங்கம் முழுமையாக உருவாக்கப்படும் முன், அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வது என்பது முறைமையியலுக்கு எதிர்மறையானது. அந்த வகையில் இன்னும் இந்த உள்ளாட்சி அமைப்புகள் சரியான தளத்தில் அமர்த்தப்படவில்லை. இருந்த போதிலும் இந்த உள்ளாட்சிகள் செய்துள்ள பணிகளை இரண்டு கோணங்களில் பார்க்கமுடியும்.


சமூக மாற்றத்திற்கு அதன் சாதனைகள் என்னென்ன? மக்களுக்குச் செய்யும் அடிப்படை வசதிகளில் சாதனைகள் என்னென்ன? என்று பார்க்கலாம். கொடுத்த சில குறைவான அதிகாரங்களை வைத்துக்கொண்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்குச் சாதனைகள் புரிந்துள்ளன என்பதைக் கிராம சபைத் தீர்மானங்களின் மூலமும், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.


தற்போது அடிப்படை வசதி கேட்டு, மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மனுச் செய்வது குறைந்துள்ளது என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது இதற்குச் சான்றாகும். அடுத்து கிராமசபையின் ஆரம்பகாலக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் பற்றிய திட்டங்களே நிறைவேற்றப்பட்டன. அவைகள் இன்று குறையத் துவங்கிவிட்டன. அடிப்படை வசதிகள் எந்த அளவுக்குக் கூடிக்கொண்டே வருகின்றன என்பதற்கு, அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரும் அறிக்கையே ஒரு சான்றாகும்.


இன்றைக்கும் தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஜனத்கொகைக்கு ஏற்ப அளவில் விகிதாச்சாரத்திலும் தலித்துக்களும் உள்ளாட்சியில் பதவிகளில் அமர்ந்துள்ளனர். குறிப்பாக கீழ்நிலைகளில் இவர்கள் பதவிகளில் இருப்பதே மிகப் பெரிய சாதனை, ஏனென்றால் நம் நாட்டில், தலித் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராவதோ, பாராளுமன்ற உறுப்பினராவதோ, அமைச்சர்களாக வருவதோ, ஜனாதிபதியாக வருவதோ, மிகப்பெரி சாதனை அல்ல. கட்சியின் பின்னணியில் வந்துவிடலாம்.


உள்ளாட்சியில் அதுவும் கிராமப் பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்கு பெண்கள் வருவதும், தலித்துக்கள் வருவதும் மிகப் பெரிய மாறுதல். அதேபோல சாதியச் சிந்தனையில் ஊன்றிப் போய் இருக்கும் நம் கிராம சமூதாயத்தில், தலித்துக்கள் கிராமப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைவராக வருவதும், அவர்களை அந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளவதும் மிகப்பெரிய சாதனையாகும்.


இந்தப் பெண் தலைவர்களும், தலித் இனத் தலைவர்களும், பஞ்சாயத்துக்களில் உள்ள தடைகளைத் தாண்டி பணியாற்றுவதே ஒரு இமாலயச் சாதனையாகும். பெண்களும், தலித்துக்களும்தான் குறிப்பாகப் பல்வேறு சாதனைகளை நம் பஞ்சாயத்துக்களில் நிகழ்த்தியுள்ளனர்.


பெரும்பாலான பொதுச் சொத்துக்கள் நம் அரசியல் கட்சிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட் டி ருந்தன . பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்களை மீட்டெக்க பெண் மற்றும் தலித்துக்களும்தான் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதற்காகப் பலர் உயிர்த்தியாகமும் செய்துள்ளனர். பலர் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்களைச் சமாளித்துக் கொண்டுள்ளனர்.


இன்றைக்குத் தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பானாலும் சரி, பாலிதீன் இல்லாத கிராமத்தை உருவாக்குவதானாலும் சரி; சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் செல்லாத இடத்திற்கெல்லாம் மின் வசதி செய்து தருவதானாலும் சரி; கிராமத்தில் உருவாகும் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து பஞ்சாயத்துக்கு வருமானம் சேர்த்து, கிராமத்தையும் சுத்தமாக வைத்து வரலாறு படைப்பதிலும் சரி, பஞ்சாயத்துத் தலைவர்கள் முன்னுதாரணமாகத் திகழ்வதை சமீப காலங்களில் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளிலிருந்து அனைவரும் அறிவர்.


அது மட்டுமல்ல, பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம் அமைத்து, தங்களுடைய பிரிச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும்.


முனைந்துள்ளனர். சமுதாய மேம்பாட்டுப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துள்ளனர். அதேபோல் தலித் தலைவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளத் தனியான ஒரு கூட்டமைப்பை உருவாக்கிப் போராடி வருகின்றனர். இந்த அமைப்புகள் அனைத்தும், அதிகாரம் பரவலாக்கப்படும் போது, பெண்களுக்கும் தலித்துக்களுக்கும் ஏற்படும் இடர்பாடுகளை, தடைகளை உடைக்கப் பாடுபடுகின்றன.


இவ்வளவு இடர்பாடுகளுக்கிடையிலும், மிகப்பெரிய சாதனைகள் நடைபெறும் என்றால், அதிகாரப் பரவலுக்கு நல்ல சூழல் இருந்தால், நம் உள்ளாட்சித் தலைவர்கள் மிகப்பெரிய சாதனைகளைப் படைப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை . அதிகாரப் பரவல் கடைசி மனிதர் வரை செல்வதற்குப் பல்வேறு விதமான தடைகளும் இருக்கும் என்பதற்கு, பெண்கள் அமைப்புகளும், தலித் அமைப்புக்களும் தொடர்ந்து போராடுவது ஒரு சான்றாகும்.


எனவே அதிகாரப்பரவல் என்பது மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியில் தான் நடக்கும் என்பதும்தான் நாம் காணும் உண்மை , எனவே இன்றையச் சூழலில், உண்மையான அதிகாரப் பரவலுக்கு ஆதரவுக்குரல் எழுப்பக்கூடிய பல்வேறு மக்கள் அமைப்புகள் தேவை. எனவே உள்ளாட்சியை வலுப்படுத்த, உள்ளாட்சி ஆதரவு இயக்கங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இவைகள் தான் நிலைத்த செயல்பாட்டை உள்ளாட்சியிடமிருந்து பெற்றுத்தர முடியும்.


மாநில அரசாங்கம் தன் துறை அலுவலர்களின் மற்றும் அதிகாரிகளின் மனோபாவத்தை மாற்றி, பங்சாயத்துக்கள் வளர்ச்சிக்கான அமைப்புகள் என்று செயல்பட உதவினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தையும், பொருளாதார மாற்றத்தையும் நம் கிராமங்களில் உருவாக்க முடியும். அதேபோல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மற்றும் சமூகக் குழுமங்களும் ஆதரவுக்கரம் நீட்டினால் பஞ் சாயத்துக்கள் , மக்கள் செயல்பாட்டுக்களமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை. எனவே பங்சாயத்துக்களுக்கு இன்றையத் தேவை ஓர் ஆதரவுச் சூழல்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு