எஸ்.ஐ. உயிரிழப்பு... மர்ம மரணத்தை... விபத்தா.. கொலையா.

எஸ்.ஐ.-க்கு தகவல் வர, சம்பவ இடத்திற்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். எஸ்.ஐ. இது நின்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்து என ஒரு சாரரும், மணல் திருடர்களால் நடத்தப்பட்ட கொலை என மற்றொரு சாரரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், மாவட்ட காவல்துறை எஸ்.ஐ.யின் மர்ம மரணத்தை ஆராய்ந்து வருகின்றது.


சனிக்கிழமை இரவு 11.00 மணிக்கு, "மாசார்பட்டி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்திலிருக்கும் அந்தோணி முருகன் என்பவரை சிலர் வெட்ட வருவதாக போன் தகவல் கிடைக்க", மேலக்கரந்தை எனும் பகுதியில் இரவு ரோந்துப் பணியிலிருந்த மாசார்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. சிவசுப்பிரமணியம் அங்கிருந்து அச்சங்குளம் பகுதிக்கு TN69A. 8055 என்ற எண் கொண்ட தன்னுடைய பல்சர் வாகனத்தில் விரைந்திருக்கின்றார்.


அப்பொழுது அந்த மதுரை டு தூத்துக்குடி NH38 ரோட்டில் ஏற்கனவே TN.69.U.3399 எண் கொண்ட லாரி நின்று கொண்டிருந்ததாகவும், சரியாக அதனை கவனிக்காத எஸ்.ஐ.யோ, அந்த லாரியின் பின்புறத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்." என எஸ்.ஐ. சிவசுப்பிரமணியத்தின் மரணத்திற்கு குறிப்பு எழுதி, உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை


"அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. மேலகரந்தை பகுதியில் தான் இரவு ரோந்து பணியிலிருக்கின்றார் எஸ்.ஐ. அங்கிருந்து குறிப்பிட்ட சில மீட்டர் தூரத்திலேயே எப்படி லாரியின் பின்புறத்தில் மோதி உயிரிழந்திருக்க முடியும்? அந்த கொலை மிரட்டல் போன் யாருக்கு வந்தது? யார் மூலம் தகவல் எஸ்.ஐ.க்கு தகவல் கூறப்பட்டது? இந்த மாசார்பட்டி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ்நாட்டுக் குறிச்சி, கைலாசபுரம் ஆகிய பகுதியிலுள்ள வைப்பாற்று படுகையில் மணல் திருட்டு அதிகம்.


அதனைக் கண்டித்ததாலோ இவர் விபத்து எனும் பெயரில் கொலை செய்யப்பட்டிருக்கலாம். முறைப்படி விசாரணை செய்து உண்மையை அறிய வேண்டும்." என காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.


மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. சிவசுப்பிரமணியத்தின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகிலுள்ள அத்திபட்டி கிராமம்.


2011ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த எஸ்.ஐ-க்களில் ஒருவரான இவர்முதலில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐ.யாகவும், அதன் பின் எட்டையபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பல காவல் நிலையங்களில் பணியாற்றி வந்தவர். 7 மாத கர்ப்பிணியான இவருடைய மனைவி பெயர் சுப்புலட்சுமி. இரண்டரை வயது பெண் குழந்தையின் பெயர் சக்திஸ்ரீ. இவருடைய மர்ம மரணத்தால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.