ஷாகீன் பாக் போராட்டம்.. இடைக்கால தடை விதிக்க மறுப்பு.. ஆனால்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி: ஷாகீன் பாக் போராட்டம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது, பொது இடம் ஒன்றில் இப்படி நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தக்கூடாது, ஆனால் அதே சமயம் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடந்து வரும் போராட்டம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி தேர்தலில் இந்த போராட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது. மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் இந்த போராட்டத்திற்கு அதிகரித்து வருகிறது . கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.


டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஷாகீன் பாக் பகுதியில் பெண்கள் தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும்.


இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இரண்டு மனுக்கள் இதில் தொடுக்கப்பட்டது. மனு 1: பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


இந்த போராட்டம் காரணமாக மக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மனு 2: டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அமித் ஷாணி வழக்கு தொடுத்துள்ளார். ஷாகீன் பாக் போராட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.டெல்லி நொய்டா சாலையில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


மக்கள் சாலையில் செல்ல முடியவில்லை. போராட்டக்காரர்கள் சத்தமாக கூச்சல் போடுகிறார்கள், என்று அவரின் மனுவில் புகார் வைக்கப்பட்டது. இன்று விசாரணை: இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் , கே எம் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அதில், இப்போது இந்த வழக்கை விசாரிக்க முடியாது.


டெல்லி தேர்தல் முடிந்து திங்கள் கிழமை இந்த வழக்கை விசாரிக்கிறோம், என்று கூறினார்கள். உத்தரவு: இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையில் மக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல் குறித்து மனுதாரர் தரப்பு எடுத்துரைத்தது. அதே சமயம், சிஏஏ போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஷாகீன் பாக் போராட்ட குழு எடுத்துரைத்தது.


இதையடுத்து உச்ச நீதிமன்றம் இதில் முக்கியமான உத்தரவை பிறப்பித்தது. அதில், ஷாகீன் பாக் போராட்டம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது, பொது இடம் ஒன்றில் இப்படி நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டம் நடத்த விரும்பினால் தனி இடத்தில நடத்தலாம். எல்லோரும் இப்படி போராட்டம் செய்தால் என்ன ஆகும். 50 நாட்கள் தாண்டி போராட்டம் நடத்தப்படுகிறது.


அதுவும் பொது இடத்தில் நடப்பதை ஏற்க முடியாது. ஆனால் அதே சமயம் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசும், மத்திய அரசும் விளக்கம் அளிக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும், அடுத்த விசாரணை வரும் 17ம் தேதி நடக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு