பணம் இல்லை.. போ..!’- தென்காசியில் மது குடிக்கப் பணம் தர மறுத்த பாட்டிக்கு நேர்ந்த சோகம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த முகமது யூசூப் என்பவரின் மனைவி, முகமது மும்தாஜ். கணவர் இறந்த நிலையில் 70 வயது மூதாட்டியான இவர், தனது உறவினர்களுடன் வசித்துவந்தார்.


முகமது மும்தாஜின் மகன் ஆமீன்ஷா இறந்துவிட்டார். அவரின் மகன் அப்துல் சலாம் என்பவர், எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிச் திரிந்திருக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அப்துல் சலாம், மது குடிப்பதற்காக பாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.


இந்த நிலையில், இன்று காலை முகமது மும்தாஜிடம் பேரன் அப்துல் சலாம் பணம் கேட்டிருக்கிறார். ‘ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்கும் வழியைப் பார். இனிமேல் குடிப்பதற்கு என்னிடம் பணம் கேட்காதே’ எனக் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.


அதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் சலாம், பாட்டியை அடித்துள்ளார். இதுகுறித்து அப்துல் சலாமின் மாமா, பெரியப்பா உள்ளிட்ட உறவினர்களிடம் முகமது மும்தாஜ் புகார் செய்திருக்கிறார். அவர்கள் இதுகுறித்து அப்துல் சலாமிடம் கேட்டபோது, ஆத்திரம் அடைந்தவர், உறவினர்களை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதனால் உறவினர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அச்சமடைந்த முகமது மும்தாஜ், உறவினர்களின் வீட்டில் சென்று பதுங்கியிருக்கிறார்.


அவரைத் தேடிய அப்துல் சலாம், உறவினர் வீட்டில் பாட்டி இருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார். அங்கு சென்று கட்டிலுடன் அவரைத் தூக்கி வெளியில் வீசியிருக்கிறார். அதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தென்காசி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இதுகுறித்து மனநல மருத்துத்துவர்கள் கூறுகையில், ’’மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், மது போதைக்காக எதையும் செய்யத் துணியும் கொடூரச் சம்பவங்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கியிருக்கின்றன.


ஏற்கெனவே, குடிக்கப் பணம் கேட்டு பாட்டியைக் கொன்ற சம்பவம் நெல்லையில் நடந்த ஓரிரு மாதங்களிலேயே, மீண்டும் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. குடிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்’’ என்கிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)