ஆன்லைன் வீடியோக்களில் அதிக நேரம் செலவழிக்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்

ஆன்லைன் வீடியோக்களில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


லைம் லைட் நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம், 2019ல் ஆன்லைன் வீடியோக்களின் நிலை (ஸ்டேட் ஆப் ஆன்லைன் வீடியோ 2019) என்ற பெயரில் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் ஒவ்வோர் ஆண்டுமே இதுபோன்ற ஆய்வை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டுக்கான ஆய்வில், இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 8 மணிநேரம் 33 நிமிடங்கள் ஆன்லைன் வீடியோவுக்காக செலவழிப்பது தெரியவந்துள்ளது. இது சர்வதேச சராசரியான 6 மணிநேரம் 48 நிமிடங்கள் என்ற அளவைவிட 1 மணிநேரம் 45 நிமிடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஆன்லைனில் வீடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியை இந்தியர்கள் முறியடித்திருக்கின்றனர்.


கடந்த ஆண்டு இந்தியர்கள் ஆன்லைன் வீடியோக்களுக்கு செலவழிக்கும் நேரம் 2 மணிநேரம் 25 நிமிடங்களாக இருந்தது. இந்த ஆண்டு, இதற்காக செலவழிக்கப்படும் நேரம் இதிலிருந்து 23% அதிகரித்துள்ளது.


ஆன்லைன் கன்டன்ட் இலவசமாக வழங்கப்பட்டால் 84.8% இந்தியர்கள் அதனை உடனே பார்க்கின்றனர். அதேபோல் ஆன்லைன் வீடியோக்களை இந்தியர்கள் வீட்டிலேயே அதிகமாகப் பார்க்கின்றனர். வீடு இல்லா விட் டால் பயணத்தின்போது காண்கின்றனர்.


ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் பிரத்யேக உபகரணங்களை (கூகுள் க்ரோம்காஸ்ட், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்) போன்றவற்றை வாங்குவதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது போன்ற புள்ளிவிவரங்களையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


பல்வேறு நவீன உபகரணங்கள் வந்துவிட்டாலும்கூட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வீடியோக்களைக் காண இந்தியர்களின் முதல் சாய்ஸ் ஸ்மார்ட் போனாகவே இருக்கிறது. அதன் பின்னரே கணினி, லேப்டாப், ஸ்ட்ரீமிங் டிவைஸ் ஆகியன இடம்பெறுகின்றன.


இந்தியர்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் அதிகம் பார்க்க விரும்புவதில் முதலிடம் பிரபல டிவி ஷோக்களுக்கே. அதன் பின்னர் செய்தி, திரைப்படங்கள், பிரத்யேகமாக சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்படும் வீடியோ என வரிசைப்படுகிறது என்று அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.