அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை. இந்த விஷயத்தைப் பெரிதாக்குவது வேதனையளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது செருப்பை பழங்குடி சிறுவனை அழைத்து கழட்டச் சொன்ன சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சிறுவன் காவல்நிலையத்தில் புகார் அளித்த பிறகு, அவசர அவசரமாக சிறுவனை குடும்பத்துடன் நேரில் அழைத்து திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.


ஆனால், பழங்குடி அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அமைச்சரின் செயலுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் அ.தி.மு.க தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் செயலை நியாயப்படுத்தி வருகின்றனர்.


'திண்டுக்கல் சீனிவாசன் செருப்பில் செடி, கொடிகள் சிக்கிவிட்டன. அதனால்தான் சிறுவனை அழைத்தார்' என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அமைச்சர் செயலலில் எந்தத் தவறும் இல்லை . தவறு ஊடகங்கள் மேல்தான்' என்று அ.தி.மு.க-வின் நாளிதழான நமது அம்மா கருத்து தெரிவித்திருந்தது.


கோவையில், நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த திண்டுக்கல் சீனிவாசனை ஊடகங்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, அவரு பாவம்... விட்ருங்க' என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், சேலம் செல்வதற்காகக் கோவை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'டி.என்.பி.எஸ்.சி ஓர் தன்னாட்சி அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியைத் தேர்வாணையம் செய்து வருகிறது. டி.என்.பி.எஸ்.சி விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றுதான் இந்த அரசு விரும்புகிறது.


அமைச்சர் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயது முதிர்வு. அவருக்கு வயது 70. அவரது செருப்புக்கும் காலுக்கும் இடையே குச்சி சிக்கிக்கொண்டது. அவரால் குனிய முடியவில்லை. அதனால், எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். இதுகுறித்து அவர் உரிய விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்த பிறகும், ஊடகங்கள் இதைப் பெரிதாக்குவது வேதனையளிக்கிறது. அ.தி.மு.க-வினர் யாரும் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட மாட்டார்கள்


இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வறட்சி என்ற சொல்லுக்கே இடமில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பக்திமான். அவர் சொல்வதெல்லாம் அவரது சொந்தக் கருத்து


அதற்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார்' என்ற முதல்வரிடம், 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா?' என்று செய்தியாளர்கள் கேட்டனர்.


அதற்குப் பதிலளித்த அவர், பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டால், மாணவர்களின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்? அப்படிச் செய்தால், அந்த மாணவர் நமது ஊரில்தான் இருக்க முடியும். வெளியூர் எல்லாம் செல்ல முடியாது மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்துவிட்டால், அவருடைய தகுதி என்ன? என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும்' என்றார்.