பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

தில்லியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்பர்கஞ்ச் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்ட ப்ரீத்தி, மர்ம நபரால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


ரோகினி கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:30 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது ப்ரீத்தி தலையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த இடத்தில் நிபுணர் குழு ஆய்வு நடத்தியுள்ளது என்று தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். தில்லிக்கு பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் நடைபெற்றுள்ள இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.