ஓரங்கட்டப்படுகிறாரா ஓ.பி.எஸ்... அதிமுக தலைமைக்கழகத்தில் மாஸ் காட்டிய இ.பி.எஸ்...

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது.


கட்சியை பொறுத்தவரை அதாவது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு அடுத்தபடியாக தான் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார் எடப்பாடி பழனிசாமி.


ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் என்ற அடிப்படையில் தான் அவர்கள் இருவர் இணைப்பு வைபவமே நடந்தது. ஆனால், கால ஓட்டத்தில் எல்லாமே மாறத்தொடங்கி இருப்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.


ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் நிகழ்ச்சி அதிமுக தலைமைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியில் முதன்மை பொறுப்பு வகிக்கக்கூடிய ஓ.பி.எஸ். தான் தலைமை தாங்கியிருக்க வேண்டும்.


ஆனால் அங்கு நடந்தது எல்லாமே தலைகீழாக இருந்தது. அதிமுக சார்பில் ஏழை எளியோருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அருகருகே நிற்க, அதிமுக தலைமைக்கழக அலுவலர் ராமச்சந்திரன் காசோலையை எடப்பாடி பழனிசாமியிடம் தான் தொடர்ந்து கொடுத்தார். அவர் அதனை வாங்கி பயனாளிகளுக்கு அளித்தார்.


கட்சி புரோட்டகால் படி அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் ராமச்சந்திரன் காசோலையை கொடுத்து பயனாளிகளுக்கு கொடுக்க சொல்லியிருக்க வேண்டும்.


இதனிடையே நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தர்மசங்கடமான சூழலில் இருந்ததை கண்ட அங்கிருந்த நிர்வாகிகள் அது பற்றி தான் விவாதித்தனர்.


ஓ.பி.எஸ். அருகே நின்றுகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, அதிமுக தலைமை அலுவலக ஊழியர் மீது அளவுகடந்த கோபம் ஏற்பட்டும் அதனை வெளிக்காட்டாமல் அமைதி காத்தார்.


ஆட்சிக்கு இணையாக கட்சியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாஸ் கூடி வருகிறது. இதனிடையே இதை இப்படியே விட்டால் சரிவராது என ஓ.பி.எஸ்.சை உசுப்பிவிட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்களான முக்கிய முன்னாள் அமைச்சர்கள் சிலர். இதனால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு பற்றியுள்ளது.