மாநிலங்களவையில் வைகோ - பிரதமர் மோடி காரச்சார விவாதம்
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று பேசினார்.
அப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளை கருப்பு நாள் என வைகோ கண்டனம் தெரிவித்தார். 05.08.2019 இந்திய வரலாற்றின் கருப்பு நாள். இது இந்துத்துவா சக்திகள் முன்கூட்டி திட்டமிட்டு நடத்திய சதிச்செயல். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். இது இந்துத்துவா சக்திகள் முன்கூட்டி திட்டமிட்டு நடத்திய சதிச்செயல்' என்று காட்டமாக பேசினார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, வைகோவின் விமர்சனத்தை குறிப்பிட்டு, பயங்கரவாதத்தை ஊக்குவிப்போருக்கே அது கறுப்பு நாள் என பதிலளித்தார். ஜம்மு காஷ்மீருக்கு 05.08.2019ஆம் தேதி கருப்பு நாள் என இந்த அவையில் வைகோ குறிப்பிட்டார்.
வைகோ அவர்களே.. அது ஜம்மு காஷ்மீருக்கான கருப்பு நாள் கிடையாது. பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஊக்குவிப்போருக்கே அது கருப்பு நாள் என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தேசிய குடிமக்கள் பதிவேடு வழக்கமான நடைமுறைதான் என்றும், வாக்குவங்கி அரசியலுக்காகவே தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.