சிலிண்டர் விநியோகம், தனியார்வசம்!' -ஊட்டியில்

நீலகிரி மாவட்டம், ஊட்டி கூட்ஷெட் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் அரசு மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் சிலிண்டர் விநியோகிக்கும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.


இதுவரை தமிழக அரசின் சிவில் சப்ளை மூலம் வழங்கப்பட்டு வந்த விநியோகம் திடீரென தனியாருக்கு மாற்றப்பட்டதால் குழப்பமடைந்த பயனாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை அணுகினர்.


பயனாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அதிகாரிகளோ, இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கொள்கை முடிவு. எங்களால் எதுவும் செய்ய முடியாது' எனக் கூறிவிட்டனர். இதையடுத்து, மீண்டும் அரசே எடுத்து நடத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் முறையிட்டு வருகின்றனர்.


சிலிண்டர் விநியோகம், தனியாருக்கு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து சிவில் சப்ளை அதிகாரிகள் கூறுகையில், "ஊட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 1988-ம் ஆண்டு இண்டேன் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடங்கப்பட்டது. 2,200 இணைப்புகளுடன் விநியோகத்தைத் தொடங்கி, தற்போது 22,000 எரிவாயு இணைப்புகள் உள்ளன.


32 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக விநியோகித்து வந்தோம். இதை நிரந்தரம் செய்யவே தனியாருக்கு மாற்றப்பட்டது. இனி தனியானால் நிறுவனம் மூலமே எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்கின்றனர்.


ஆனால், தனியாருக்கு மாற்றப்பட்டது குறித்துப் பேசும் வாடிக்கையாளர்களோ, " ஏற்கெனவே தனியார்வசம் இருந்த சிலிண்டர் விநியோகத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடப்பதாகக் கூறி அப்போதைய ஆட்சியர் தனியார் உரிமத்தை ரத்து செய்து அரசிடம் வழங்கினார். தற்போது நிரந்தர உரிமம் வழங்குகிறோம் என்ற பெயரில் தனியாருக்கு வழங்கிவிட்டனர். எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கும்... குறித்த நேரத்தில் சிலிண்டர் வழங்குவார்களா?' எனக் கேள்விகளை அடுக்குகின்றனர்.


விநியோக உரிமம் பெற்ற தனியார் நிறுவனத்திடம் பேசியபோது, "இனி வரும் நாள்களில் சிலிண்டர் விநியோகத்தில் எந்தவிதச் சிக்கலும் இருக்காது. சிலிண்டரை புக் செய்த மூன்று நாள்களுக்குள் விநியோகம் செய்துவிடுவோம்" என்றனர்.


ஊட்டியில் அரசின் சாா்பில் விநியோகிக்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியாரிடம் ஒப்படைத்திருப்பதை ஏற்க முடியாது' எனக் கூறி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் வாடிக்கையாளர்கள்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்