வெளியான மத்திய பட்ஜெட் அறிவிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் உடனடியாக மேம்படுவதற்கு வாய்ப்பு இல்லை 'கிரிசில்' தகவல்!
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று 2020-2021ம் ஆண்டுக்கான மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சரின் இந்த பட்ஜெட்டில் பிரச்சனைக்குரிய அம்சங்கள் இருப்பதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிரிசில் (Crisil) என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து அவ்வபோது ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டும். அதன்படி புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் இந்தியாவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “உள்நாட்டில் நுகர்வும் தனியார் முதலீடுகளும் குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
2018-19 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருந்த நிலையில், 2019-20ஆம் ஆண்டில் 5.7 முதல் 6.6 சதவிகிதம் வரையில் இருக்கும். அரசின் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், உள்கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அதிகளவில் செலவிட்டால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, பட்ஜெட் நடவடிக்கைகளால் 21ம் நிதியாண்டு வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய வாய்ப்பில்லை. இந்த ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவிகிதத்துக்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டைவிட நிதி பற்றக்குறை அதிகரித்துள்ளதாகவும் சென்ற ஆண்டில் இதன் இலக்கு 3.3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது என்பதையும் கிரிசில் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.