மெக்கானிக்குகளிடமிருந்து வித்தியாசமானவர். அவருக்கு பார்வைக்குறைபாடு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கியிலிருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் இருக்கிறது, சீனிவாசனின் (38) மெக்கானிக் ஷாப். சிறிய கூரைக் கொட்டகை.


ஒருபுறம் சர்வீஸ் செய்த டூவீலர்கள். மறுபுறம் சர்வீஸ் செய்வதற்காக வரிசையில் நிறைய வண்டிகள்.


அதில் ஒரு வாகனத்தின் இன்ஜினைப் பிரித்து சர்வீஸ் செய்துகொண்டிருந்தார் சீனிவாசன். மற்ற மெக்கானிக்குகளிடமிருந்து வித்தியாசமானவர்.


அவருக்கு பார்வைக்குறைபாடு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தால் சீனிவாசனின் பார்வை பறிபோய்விட்டது.


ஆனாலும் முடங்கிப்போகாமல், பேர்போன மெக்கானிக்காக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.சீனிவாசனிடம் பேசினோம். புன்னகை மாறாமல் பேசுகிறார்.


``ஒருநாள், சர்வீஸ் செஞ்ச டூவிலரை ஓட்டிப்பார்க்க எடுத்துக்கிட்டு போனேன். திடீர்னு டூவீலரோட முன் வீல் டயர் வெடிச்சிருச்சு.


கன்ட்ரோல் பண்ணமுடியல. போய் மரத்தில மோதியிருச்சு. நான் பைக்ல இருந்து விழுந்ததுல தலையில அடிபட்டுருச்சு. அதுல பார்வை நரம்பு கட்டாயிருச்சாம்.


`உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனாலும் பார்வை உடனே வருமான்னு சொல்ல முடியாது'னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. ஒரு மாசம் வரைக்கும் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில வச்சு வைத்தியம் பாத்தாங்க.


கண்ணு முழிச்சப்ப, அப்பா, அம்மாவ சரியா அடையாளம் கண்டுட்டேன். உடனே எனக்கு கண் தெரிஞ்சிருச்சேன்னு சொல்லி வீட்டுல எல்லாருக்கும் சந்தோஷம்.


ஆனா, அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. அடுத்த கொஞ்ச நாள்லயே கொஞ்சம் கொஞ்சமா பார்வை தெரியாமப் போச்சு.இப்போ, 90 சதவிகிதம் பார்வை தெரியாது.


பக்கத்துல யாராவது வந்தா, நிழல்மாதிரி தெரியும். அவங்களோட குரலவச்சுதான் இன்னாருன்னு தெரிஞ்சிக்குவேன். எனக்கு பார்வை வரவைக்க அம்மாவும் அப்பாவும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. ஏறாத கோயில் இல்லை.


போகாத மருத்துவமனை இல்லை. ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. ஒர்க்‌ஷாப்ல ஒன்னா வேலைபார்த்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து, பெங்களூர் வரைக்கும் கூட்டிட்டுப் போனாங்க.


அங்கே இருக்கிற டாக்டருங்க டெஸ்ட் எல்லாம் எடுத்துப்பார்த்தாங்க.லேட்டா வந்ததால எதுவும் செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க. மே


வைத்தியம் பாக்குற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லை. எனக்கு கண் தெரியாம போன ரெண்டு வருஷத்துக்குள்ள அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போயிட்டாங்க.


ரெண்டு அக்காக்களுக்கும் கல்யாணம் முடிச்சி வச்சாச்சு. என்னைப் பார்த்துக்கிறதுக்கு யாரும் இல்லை. அந்த நேரத்தில, சின்ன அக்காதான் எனக்கு அம்மா அப்பாவா இருந்து பார்த்துக்கிட்டாங்க.இப்பவும் பாத்துக்கிறாங்க.


9-ம் வகுப்பு வரையிலும் படிச்சிருக்கேன். அதுக்கப்புறம் படிப்பு மண்டையில ஏறலை. அப்பவே, சென்னையில் சைக்கிள் கம்பெனிக்கு வேலைக்கு போயிட்டேன். அப்புறம்தான் டூவிலர் மெக்கானிக் கத்துக்கிட்டேன்.


மெக்கானிக்கா 25 வருஷ அனுபவம் எனக்கு. விபத்து நடந்து இப்போ 13 வருஷம் ஆச்சு. விபத்து நடந்தப்ப, செருவாவிடுதியில ஒரு மெக்கானிக் ஷாப்ல வேலைபார்த்துக்கிட்டு இருந்தேன்.


இன்ஜின் வேலை எல்லாம் எனக்கு அத்துபடி.இந்தத் தொழில்மீது எனக்கு நிறைய ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. அந்த ஈடுபாடுதான் இன்னைக்கு கண்ணு தெரியாதபோதும் மீண்டும் இந்தத் தொழிலை செய்ய வச்சிருக்கு.


விபத்து நடந்தப்போ, இந்த வேலையே இனி நம்ம வாழ்க்கையில வேண்டாம்னு வீட்டுக்குள்ளயே கிடந்தேன். ஆனா, என்னோட வேலைபார்த்த நண்பர்கள் விடல. நலம் விசாரிக்க வந்தவங்க, `ஒரு நல்ல மெக்கானிக், இப்படி கண்ணு தெரியலைன்னு முடங்கக்கூடாது.


கடைக்கு வர்ற கஸ்ட்டமர்களெல்லாம் சீனி எங்கன்னுதான் கேட்கிறாங்க.உன்னால கண்டிப்பா இந்தத் தொழிலை செய்ய முடியும்'னு அவங்கதான் ஊக்கம் கொடுத்தாங்க. 


இருந்து ஸ்பானர் எடுத்துக் கொடுக்குறதுல இருந்து இன்ஜின் பிரிக்க உதவுறது வரைக்கும் நண்பர்கள் உதவி செஞ்சாங்க.அதுக்கப்புறம் எல்லா டூல்ஸும் பக்கத்துல இருக்கிற மாதிரி செட் பண்ணிக்கிட்டேன்.


போகப்போக நண்பர்கள் உதவி இல்லாம வேலை செய்ய ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல சொந்தமாவே ஊர்ல மெக்கானிக் ஷாப் ஆரம்பிச்சிட்டேன்.


ஆரம்பிக்கும்போதுசரியான டூல்ஸ் எதுவும் இல்லை. `பாரதப் பறவைகள்'னு ஒரு அமைப்புல இருந்து டூல்ஸ் வாங்கிக்கொடுத்தாங்க.


அதவச்சு வேலையை ஆரம்பிச்சேன். மொதல்ல, ஒண்ணு ரெண்டு டூவீலர்தான் வரும். இப்போ, நம்மால வேலைபார்க்கத்தான் முடியலை.தனியா என்னால சர்வீஸ் செய்ய முடியுது. ஊருக்குள்ள ரெண்டு மூனு ஒர்க் ஷாப் இருந்தாலும், எனக்குன்னு சில வாடிக்கையாளர்கள் இருக்காங்க.


கண்ணு தெரியலைனு சொல்லி பிச்சை எடுத்து சாப்பிடுறதவிட, தெரிஞ்ச வேலையை வச்சு உழைச்சு சாப்பிடுறது எனக்கு மகிழ்ச்சியா தெரிஞ்சது.


அததான் இப்போ பண்ணிக்கிட்டு இருக்கேன். `நீ சாதிக்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கு'ன்னு சொல்லி நண்பர்கள் கொடுத்த ஊக்கமும், அக்காவோட பாசமும்தான் இதுக்கெல்லாம் காரணம்.
கண்ணு தெரியாதவனுக்கு யாரு பொண்ணு கட்டுவாங்கன்னு சொல்லி சொந்தக்காரங்களே கேலி, கிண்டல் பண்ணியிருக்காங்க.


நம்மலயே நம்மால பார்த்துக்க முடியலை. இதுல நமக்கு எதுக்கு கல்யாணம்னு தான் நெனச்சேன். ஆனா, அக்காதான் அப்படியெல்லாம் விடமுடியாதுன்னு சொல்லி, 6 மாசத்துக்கு முன்னால கல்யாணம் பண்ணி வச்சாங்க.


அக்கா மாதிரியே, மனைவியும் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. ரொம்ப மகிழ்ச்சியா வாழ்க்கை போயிட்டு இருக்கு..."உற்சாகமாகச் சொல்கிறார் சீனிவாசன். சீனிவாசனிடம் பேசும்போது நமக்கும் சிறகு முளைக்கிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்