கெஜ்ரிவால் டெல்லி வன்முறை நிகழ்ந்த இடங்களை பார்வையிட்டார்

டெல்லியில் வன்முறை நிகழ்ந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.


வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் நேரில் பார்வையிடவும் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னதாக இன்று அறிவுறுத்தியிருந்தது.


டெல்லி வன்முறை தொடர்பான பொதுநல மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 1984-ஆம் ஆண்டு சம்பவத்தை மீண்டும் உருவாக்கிடக் கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும் எனக் கூறியது.கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்களை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிக்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் டெல்லி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும் என்றும் ஆணையிட்டது.கலவரத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்நிலையில் இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.