சத்துணவுத் திட்டம் இனி மனுதர்மத் திட்டமா இந்துத்துவா இஸ்கானிடம் ஒப்படைப்பதா வைகோ கண்டனம்.

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தியாகப் பெருஞ்சுடர் காமராசர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.


அவர்கள் காலத்தில், சத்துணவுத் திட்டமாக வளர்ச்சி பெற்றது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில், 5785 மாணவர்களுக்கு மட்டும், காலை சத்து உணவு கொடுக்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நேற்று துவக்கி இருக்கின்றது.


ஆனால், இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தப்போவது இல்லை. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் என்ற இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைத்து விட்டார்கள்.


அதற்காக, சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை, அந்த அமைப்பிற்கு அடிமை அரசு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. இந்த இடங்களின் மதிப்பு, இன்றைய நிலையில் 500 கோடிக்கும் மேல் ஆகின்றது.


ஆளுநர் ரூ5 கோடி
இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு எந்த முன்அறிவிப்பும் வெளியிடவில்லை. வேறு அமைப்புகள் விண்ணப்பம் தர எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை.


எல்லாமே ரகசியமாகவே நடைபெற்று இருக்கின்றது. இது சட்டத்திற்கு எதிரானது. யாருடைய கட்டாயத்திற்கோ எடப்பாடி அரசு அடிபணிந்து இருக்கின்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 கோடி நிதி அளித்து இருக்கின்றார்.


தனியாருக்கு தாரை வார்ப்பதா?
இவ்வாறு அரசுப்பணத்தை ஒரு தனியார் அமைப்பிற்கு அள்ளிக்கொடுக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றதா? இலட்சக்கணக்கான சத்துஉணவுப் பணியாளர்களின் உழைப்பில் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்று இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கின்ற சத்து உணவுத் திட்டத்தை, முழுமையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கம்தான், இந்தப் புதிய திட்டம்.


சர்ச்சைக்குரிய இஸ்கான்
இந்த இஸ்கான் அமைப்பு, ஏற்கனவே கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்ற சத்து உணவில், வெங்காயம், பூண்டு கலக்காத சாம்பாரைக் கொடுத்தது.


அதனால் மாணவர்கள் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. தமிழ்நாட்டில் சத்துஉணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது.


இஸ்கான் அமைப்பு சைவ உணவை வலியுறுத்துவது ஆகும். முன்னேறிய நாடுகளிள், பள்ளி மாணவர்களுக்கு இறைச்சியும் வழங்கப்படுகின்றது.


இனி மனுதர்ம சத்துஉணவுத் திட்டமா?
இந்த நிலையில், இந்த அமைப்பு, தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு எதிராகவே செயல்படும்.


எனவே, இனி சத்துஉணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துஉணவுத் திட்டம் ஆக இருக்காது; மனுதர்ம சத்துஉணவுத் திட்டம் ஆகி விடும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக எதிர்க்கின்றேன்.


மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்