உதவித்தொகையை பெற்றுத்தர லஞ்சம் - அலுவலர், இடைத்தரகர் கைது

திருமண உதவித்தொகை பெற்றுத்தர ரூ.3,000 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர்.


கடலூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவர் தனது மகள் தமிழரசியின் திருமணத்துக்காக சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் அரசின் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகிய திட்டங்களை பெற இணையதளம் மூலம் விண்ணப்பம் அளித்துள்ளார்.இதுதொடர்பாக விருத்தாசலத்தைச் சேர்ந்த இடைத்தரகர் கார்த்திக் என்பவர் கோவிந்தராஜை தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. அவர் லஞ்சம் கொடுத்தால் திருமண உதவித்தொகையை பெற்றுத்தருவதாக தெரிவித்திருக்கிறார்.


இதையடுத்து இடைத்தரகர் கார்த்திக் மூலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா ரூ.3500 கேட்டிருக்கிறார்.


பின்னர் நடைபெற்ற பேரத்தில் ரூ.3 ஆயிரத்தை கோவிந்தராஜிடம் கேட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.


இந்நிலையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான விஜிலன்ஸ் பிரிவினர், ஜெயபிரியா மற்றும் இடைத்தரகர் கார்த்திக் ஆகியோரை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.