லிபியாவில் சமாதானம் திரும்புமா

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளம்மிக்க நாடாகத் திகழ்ந்த லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வரக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. 2020ஆம் ஆண்டில் உலக அரங்கில் இருந்து வெளிவரும் முதல் நல்ல சேதியாக இது அமைந்துள்ளது. ஜனவரி 19இல் ஜெர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற பல தரப்பு மகாநாடு, இதற்கான சமிக்ஞைகளைத் தந்து நிற்கிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மகாநாட்டில் லிபியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் தலைமை அமைச்சரான பயஸ் அ-சராஜ், மற்றும் லிபிய தேசிய இராணுவத்தின் தளபதியான ஜெனரல் கலீபா ஹாப்ரர் ஆகியோர் இந்த மகாநாட்டில் சமூகம் தந்திருந்த போதிலும், அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப் படுகின்றது.


இவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்துப் பரிமாறல்களையும், யேர்மன் அரசுத் தலைவி அங்கெலா மேர்க்கல் அவர்களே முன்னின்று நடாத்தினார்.


ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ரோனியோ குரேறஸ் அவர்களுடன் ரஸ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்றோன், பிரித்தானியத் தலைமை அமைச்சர் போரிஸ் ஜோன்சன், துருக்கி அரச அதிபர் எர்டோகான்இத்தாலியத் தலைமை அமைச்சர் குஸ்ஸெப்பே கொன்ரே, கொங்கோ குடியரசுத் தலைவர் தலைவர் டெனிஸ் சாசு என்குஸ்ஸோ ஆகியோர் உட்பட அமெரிக்கா, சீனா, எகிப்து, அல்ஜீரியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டனர்.


இந்த மகாநாடு நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக ரஸ்யாவில், லிபிய மோதலில் ஈடுபடும் இரண்டு தரப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு சமாதான மகாநாடு ரஸ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் முன்முனைப்பில் நடைபெற்றது. குறித்த மகாநாட்டில் இரண்டு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத போதிலும், பேர்லின் மகாநாட்டில் ஒரு ஒப்பந்தம் உருவாவதற்கான ஏது நிலைக்கு ரஸ்ய மகாநாடே காரணம் என நம்பப் படுகின்றது.


பேர்லின் மகாநாட்டிற்கு முன்னதாகவே யனவரி 12 இல் லிபியாவில் ஒரு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் போர் நிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும், லிபியா மீதான போர்த் தளபாடத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் இந்த மகாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதேவேளை, அன்றாடம் எழுக் கூடிய பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கும், எதிர்காலச் செயற்பாடுகளுக்குமாக தலா 5 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டு உள்ளது.


அரபு நாடுகளில் ஏற்பட்ட 'ஐனநாயக வசந்தம்' என்ற தலைப்பிலான மக்கள் எழுச்சியின் தொடர்ச்சியாகவே லிபியாவில் அரசுத் தலைவர் கேணல் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உருவாகின. கேணல் கடாபியை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் எனத் தருணம் பார்த்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. ஐ. நா. வின் உதவியுடன் நேட்டோவைத் துணைக்கு வைத்துக் கொண்டு அமெரிக்கா உருவாக்கிய இராணுவக் குழுக்கள் கேணல் கடாபியைக் கொலை செய்தது மட்டுமன்றி, லிபியாவையும் துண்டு போட்டுக் கொண்டன.


- பராக் ஒபாமா அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த காலகட்டத்திலேயே இந்தச் சம்பவங்கள் நடந்தேறின. "லிபியத் தலையீடு ஒரு சரியான முடிவு" எனக் கூறிய ஒபாமா, ஒரு சில வருட இடைவெளியில் "தனது பதவிக் காலத்தில் நிகழ்ந்த மிக மோசமான தவறு லிபியத் தலையீடு" என ஒத்துக் கொண்டார். 'கேணல் கடாபி கொல்லப்பட்டதன் பின்னான சூழலை தனது நிர்வாகம் கையாண்ட விதம் தவறானது' என்பது அவரது நிலைப்பாடு.


-ஆனால், தவறை உணர்ந்து கொள்ளும் போதோ லிபியாவில் அனைத்துமே எல்லை கடந்த நிலைக்குச் சென்று விட்டதுஅல் கைதா தீவிரவாதிகளின் செல்வாக்கு அதிகரித்த நிலை, போட்டி இராணுவக் குழுக்கள் இடையேயான ஆயுத மோதல்கள்ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் ஆட் கடத்தல்களின் கேந்திர நிலையமாக மாறிய லிபியா, அதன் நீட்சியாக இடம்பெறும் அடிமை வர்த்தகம் என ஒரு காலத்தில் வளம் கொழிக்கும் நாடாக இருந்த லிபியா, மனிதர் வாழ்வதற்கு ஏற்றதல்லாத நரகமாக மாறிப் போனது.


இத்தகைய பின்னணியிலேயே ஜெனரல் கலீபா ஹாப்ரரின் வகிபாகம் முக்கியத்துவம் பெறுகின்றது. லிபியப் புரட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஹாப்ரர், கேணல் கடாபியின் நண்பரே. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டில் லிபியாவின் சார்பில் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அவரை, ஒரு காலத்தில் கைவிட வேண்டிய நிலை கடாபிக்கு உருவான வேளை அவரின் எதிரியாக மாறினார் ஹாப்ரர்.


- பின்னாளில் அமெரிக்கா சென்று அங்கே வசித்து வந்த ஹாப்ரர், 2011இல் லிபியாவில் உருவான பதற்ற நிலையை அடுத்து நாடு திரும்பினார். கடாபியின் மறைவின் பின்னர் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பிடி இறுகியதை அடுத்து, அவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு நகரை விடுவித்தார். தொடர்ந்து மக்கள் ஆதரவு அவருக்கு அதிகரித்தது. தற்போதைய நிலையில் லிபியாவின் பெரும்பாலான நிலப் பிரதேசம் அவரது படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அது மாத்திரமன்றி, நாட்டின் முக்கிய பொருளாதார வளமான எண்ணெய் வயல்களையும் அவரே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இவரது வேகமான படை நடவடிக்கைகளுக்கு ரஸ்ய நாட்டில் இருந்து சென்றுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் இராணுவத்தினரும்இராணுவ ஆலோசகர்களும் பெரிதும் உதவி வருகின்றனர்.


-தலைநகர் திரிப்பொலியை மாத்திரம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் தற்போது கையறு நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், சிரியாவில் பயிற்சி பெற்ற துருக்கி ஆதரவு கெரில்லாக்கள் இரண்டாயிரம் பேரை துருக்கி இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக அனுப்பி வைத்துள்ளது.


ரஸ்ய அனுதாபியாகவே கேணல் கடாபி விளங்கி வந்தார். இந்நிலையில் ஜெனரல் ஹாப்ரர் வெற்றி பெற்றால் தனது ஆயுதத் தளபாடங்களை விற்பனை செய்து வருமானத்தை ஈட்டுவது மட்டுமன்றி, தனது செல்வாக்கு வளையத்தினுள் லிபியாவை வைத்திருக்கலாம் என்பது ரஸ்யாவின் கணக்கு.


- இஸ்லாமிய உலகில் தனது செல்வாக்கை உயர்வாக வைத்திருக்க விரும்பும் துருக்கி ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் முன்னொரு காலத்தில் மாகாணமாக வியங்கிய லிபியாவை தனது செல்வாக்கு வளையத்தில் கொண்டுவர முயல்கிறது. இதன் ஒரு அங்கமாக லிபியாவிற்கு ஆயுதப் படைகளை அனுப்பி வைக்கும் நோக்கில் தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரமும் பெற்றுள்ளது.


சிரிய விவகாரத்தில் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டினை ஆதரித்து நிற்கும் ரஸ்யாவும் துருக்கியும் உள்நாட்டில் பல இணைந்த நடவடிக்கைளை மேற்கொண்டு மோதல்தவிர்ப்பு விடயங்களில் சாதனைகளை நிகழ்த்தி நிற்கின்றன. லிபியாவிலும் எதிரெதிர் தரப்புக்களை ஆதரித்து நிற்கும் போதிலும் சிரியா போன்ற அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து இரு நாடுகளும் இணைந்து அமைதியை நிலைநாட்டுவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


அமெரிக்க அரசுத் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்ததன் பின்னான காலப் பகுதியில், உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து வருவதைப் போன்று தென்படுகின்றது. சிரிய விவகாரத்தில் அமெரிக்கா தொடங்கி வைத்த உள்நாட்டு யுத்தம், ரஸ்யத் தலையீடு காரணமாக முடிவிற்கு வரக் கூடிய ஏதுநிலை உருவாகி உள்ளது. ஒரு கட்டத்தில் சிரிய அதிபர் அசாட் பதவியில் இருந்து அகற்றப்படக் கூடிய அபாயம் இருந்ததை மறுத்துவிட முடியாது. இருந்தும் ரஸ்யத் தலையீடு அசாட்டின் அரசாங்கத்தைப் பலப்படுத்தி உள்ளது டன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்தி உள்ளது.


-அத்தகைய அணுகு முறை லிபியாவிலும் சாத்தியப் படுமா? நம்புவதற்கு எதுவுமே இல்லாதபோதில், எதையாவது நம்பியே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகும். லிபிய மக்களின் நிலை இன்று அதுவாகத்தான் இருக்கும். அவர்களோடு சேர்ந்து நல்லது நடக்கும் என நாமும் நம்புவதைத் தவிர, வேறு வழியில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்