திருடனை சிக்க வைத்த அபராத குறுஞ்செய்தி

சென்னையில் திருடப்பட்ட புல்லட்டிற்கு திருநெல்வேலி போலீசார் அனுப்பிய அபராத குறுஞ்செய்தியால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடி வந்த என்ஜினியரிங் பட்டதாரி திருடன் சிக்கியிருக்கிறான். 


சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் வசித்து வரும் கபிலன் என்பவர், கடந்த ஜனவரி மாதம், தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை காணவில்லை என சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்தநிலையில், கடந்த வாரம், அவருக்கு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 1000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என காவல்துறை தரப்பிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த கபிலன் உடனடியாக சூளைமேடு காவல் நிலையத்திற்கு சென்று குறுஞ்செய்தியை காட்டி விபரத்தை கூறி உள்ளார்.


தற்போது, தமிழ்நாடு முழுவதும், போக்குவரத்து விதிகளை மீறினால், போலீசார், பெரும்பாலும் அபராதங்களை பணமாக பெறுவதில்லை.


அவர்கள் வைத்திருக்கும், இ-சலான் எந்திரங்கள் மூலம், டெபிட் அல்லது கிரடிட் கார்டுகள் மூலமாக, அதாவது மின்னணு பணப்பரிவர்த்தனை முறையில் அபராதம் பெறுகின்றனர்.


இவ்வாறு அபராதம் விதிக்கப்படும்போது, வாகனத்தின் உரிமையாளரின் செல்போனுக்கு உடனடியாக குறுஞ்செய்தி வந்துசேர்ந்துவிடும்.


இவ்வாறு, கபிலனுக்கு வந்த எஸ்எம்எஸ் குறித்து சென்னை போலீசார் விசாரித்தபோது, அந்த அபராத குறுஞ்செய்தி, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதி போலீசாரால் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.


இதுபற்றி திருநெல்வேலி போலீசாரிடம், சூளைமேடு போலீசார் விசாரித்தனர். அப்போது, பைக்கை ஓட்டி வந்த நபர், திருநெல்வேலியைச் சேர்ந்த, 27 வயதான கொம்பையா என தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து, திருநெல்வேலிக்கு உடனடியாக விரைந்த சூளைமேடு போலீசார், கொம்பையாவை கைது செய்தனர்.


பொறியியல் பட்டதாரியான கொம்பையா, சென்னையில் உள்ள அக்கா கணவர் அருணாச்சலம், மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத், தில்லை நடராஜன், வானமாமலை ஆகியோருடன் இணைந்து, பைக் மற்றும் கார் திருட்டில் ஈடுபட்டுள்ளான்.


திருடும் வாகனங்களை உடனடியாக எடுத்துச் செல்லாமல், சாலையின் ஓரங்களில் வாரக்கணக்கில் நிறுத்தி வைத்திருந்து, பழைய வாகனம்போல் எடுத்துச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. கொ


சென்னையைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான, 6 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் உட்பட ஏழு இருசக்கர வாகனங்கள், ஆறு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் கும்பலின் முக்கிய நபர்களான அருணாச்சலம், வினோத், தில்லை நடராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..