ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் உஷார்!

சமீபத்தில், ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்த ஒரு குடும்பம், ஊட்டியின் பிரதான இடத்திலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காருக்கு எரிபொருளை நிரப்பிவிட்டு கொண்டாட்டமாக சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்கக் கிளம்பினர்.
நகரிலிருந்து சில கிலோ மீட்டர் சென்றிருப்பார்கள். வனப்பகுதியில் திடீரென கார் நின்றுபோனது.


குழம்பிப்போன காரின் ஓட்டுநர், என்ஜின் பகுதியை செக் செய்துள்ளார். எல்லாம் சரியாக இருக்கவே, மீண்டும் காரை இயக்க எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. கடைசியாக, பெட்ரோல் இருப்பை சோதித்தபோதுதான், காரில் பெட்ரோல் இல்லை என்பது புரிந்துள்ளது.


"இப்போதானே 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டோம், அதுக்குள்ள எப்படித் தீர்ந்தது?" என்று குழம்பினர். பல மணிநேரம் நடு ரோட்டில் குழந்தைகளுடன் நின்றவர்கள், அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தில் ஏறிச்சென்று, பெட்ரோலுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


முன்னர், தாங்கள் பெட்ரோல் நிரப்பிய பங்க்கிற்கு வந்தவர்கள், பங்க் ஊழியர்களிடம் நல்ல முறையில் கேட்டுள்ளனர். ஆனால், ஊழியர்கள் தரக்குறைவாகப் பேச, ஆத்திரமடைந்த அந்தக் குடும்பத்தினர் சத்தம் போட்டுவிட்டுக் கிளம்பியுள்ளனர்.


இது ஏதோ ஒருநாள் நடக்கும் நிகழ்வல்ல. ஊட்டியில் இதுபோன்ற காட்சிகளைத் தினந்தோறும் நம்மால் பார்க்க முடிகிறது.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு பங்க்கில் தனது சரக்கு வாகனத்திற்கு டீசல் நிரப்பியுள்ளார் ஒரு டிரைவர்.


ஆனால், ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்வதற்குள்ளாகவே வண்டி நின்றுவிட்டது. திருப்பி அதே பங்க்கிற்கு வந்த டிரைவர், பங்க் ஊழியர்களிடம் எரிபொருளை சோதிக்குமாறு செய்தார். அதில் டீசல் இல்லை. இந்த முறைகேட்டை சமூக வலைதளங்களில் வீடியோவாக அவர் பரப்பவும், விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.


இதுநாள் வரை, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், சரக்கு வானங்களில் நிரப்பும் எரிபொருளில் மட்டும் முறைகேடு செய்துவந்த பெட்ரோல் நிலையங்கள், தற்போது உள்ளூர் மக்களிடமே வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.


'என்றாவது ஒருநாள் சுற்றுலா வருகிறோம், எதற்குப் பிரச்னை' என சுற்றுலாப் பயணிகள் வெறும் சத்தம் போட்டதோடு கிளம்பிவிடுவதால், மேல்நடவடிக்கை ஏதுமின்றி கொள்ளையடிக்கும் பெட்ரோல் நிலையங்கள் குளிர்காய்ந்து வருகின்றன.


ஊட்டியைச் சேர்ந்த ரொசாரியோ என்பவர், தனது இரு சக்கர வாகனத்துக்கு ரூ.200-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, குந்தா செல்வதற்காக பாதிதூரம் செல்லும்போதே வண்டியில் பெட்ரோல் தீர்ந்து நின்றுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தரக்குறைவான வசவுகளே கிடைத்துள்ளன. சுதாரித்த ரொசாரியோ, ஊட்டி காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளார்.


மேலும், காவலர்களை அழைத்துவந்து பங்க்கில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் காட்டியுள்ளார். இதில், பெட்ரோல் நிலைய ஊழியர்களின் தகிடுத்தத்தம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக நுகர்வோர் நீதி மன்றத்தையும் ரொசாரியோ நாடவுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பொள்ளாச்சியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், "நைட்டு பகலா தூக்கம் முழிச்சி வண்டிய ஓட்டிட்டுவறோம். பங்க்குக்கு வந்து டீசல் நிரப்புனா, அதுல பாதி அடிச்சிட்டு மீதியை இவங்க அடிச்சிடுறாங்க.


இன்னும் சில இடத்துல, டீசல் அடிக்காமலே அடிச்சிட்டோம்னு சொல்றாங்க. மிஷின்ல நம்பர் கரெக்ட்டா வர்ற மாதிரி காட்றாங்க. இவங்க பன்ற இந்த மோசடியால, நம்ம நடுக்காட்டுல மாட்டிக்கிட்டு தவிக்கவேண்டியதா இருக்கு. திருப்பி வந்து விசாரிச்சா, 'வண்டிய சரிபண்ணுங்க மைலேஜ் கிடைக்கும்'னு நக்கலா பதில் சொல்றாங்க" என்று புலம்பினார்.
ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்குகின்றனர். இ


ஓனருக்குத் தெரியாமல் முறைகேடு செய்து, அதில் கிடைக்கும் பணத்தை ஊழியர்கள் பங்கு பிரித்துக்கொள்கிறார்களாம். இவர்களின் இந்த கொள்ளைக் கூட்டணியால் நடுக்காட்டில் பரிதவிப்பது அப்பாவி சுற்றுலாப் பயணிகள்தான். கோடைக் கால விடுமுறை நெருங்கிவிட்ட சூழலில், ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.


இந்த மோசடி பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளை நிரப்பிவிட்டு, எத்தனை பேர் நடுக்காட்டில் நிற்கப்போகிறார்களோ... என உள்ளூர்வாசிகளே ஆதங்கமடைகிறார்கள்.


மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மோசடியில் ஈடுபடும் பெட்ரோல் நிலையங்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதற்கு ஒரு விடிவு பிறக்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்