ரஜினி.. ஆனால் நினைப்பது நடக்குமா.. அதிகரிக்கும் சஸ்பென்ஸ்!
சென்னை: இஸ்லாமிய மதகுருமார்களை ரஜினிகாந்த் சந்திக்க போகிறார் என்றதுமே அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகி உள்ளன. இது என்ன சமாச்சாரம்? எதற்சான சந்திப்பு? சமாதானமா? சர்ச்சையா? என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சிஏஏ சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களும் போராட்டம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது, அப்படி ஒருவேளை பிரச்சனை வந்தால் நான் முதல் ஆளாக குரல் தருவேன் என்றார் ரஜினிகாந்த்.
இப்படி சொன்னதுமே பல்வேறு தரப்பில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. சிஏஏ சம்பந்தமான கருத்து முழுக்க முழுக்க பாஜகவின் கருத்தாகவும் பார்க்கப்பட்டது.. இந்த அதிர்வலை இஸ்லாமிய அமைப்பினரிடையே அதிகமாகவே ஏற்பட்டதை காண முடிந்தது. இந்த சட்டத்தை பற்றி எதுவுமே தெரியாமல் ரஜினிகாந்த் பேசுவதாகத்தான் அவர்கள் முதலில் இதனை பார்த்தார்கள்.
இந்நிலையில் நேற்று, இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் ரஜினிகாந்த் போனில் பேசியதாகவும் அதன் பின்னர் நேரில் சந்தித்து சிஏஏ சட்டம் குறித்து ஆலோசிக்க தயார் என்று கூறியதாகவும் செய்தி வெளியானது. . ஆனால்.. உண்மையிலேயே எதற்கான சந்திப்பு இது என்பதை முழுவதுமாக உறுதியாக சொல்ல முடியவில்லை.
மொத்தம் 3 காரணங்கள் பரபரக்கின்றன.. முதலாவதாக, சிஏஏ சட்டத்தால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து இஸ்லாமியர்கள் ரஜினியிடம் விளக்குவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் அவர்கள் விளக்கம் அளிக்க முயலும்போது, ரஜினியும் தனது தரப்பு விளக்கத்தை அவர்களுக்கு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மற்றொன்று ரஜினிகாந்த் படம் ஓடுவதற்கான வர்த்தக ரீதியான சந்திப்பாக பார்க்கப்படுகிறது...
சரியாக சொல்ல வேண்டுமானால் 10 வருடமாகவே ரஜினிகாந்த் படம் எதுவும் பிளாக் பஸ்டர் ரேஞ்சுக்கு ஓடவில்லை.. அதனால் இவர்களின் ஆதரவு ரஜினிக்கு தேவை என்றே கருதுவதாக கூறப்படுகிறது...
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இனி வரும் அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படமாக இஸ்லாமிய குடிமக்களின் ஆதரவினை பெறுவதற்காகவே இந்த சந்திப்பு என்றும் சொல்லப்படுகிறது..
இனி எந்த படம் வெளிவந்தாலும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் புறக்கணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. இது வர்த்தக ரீதியாக ரஜினியை பாதிக்கவே செய்யும் என்பதால் கிட்டத்தட்ட கூல் நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.
3வதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. அதுதான் திமுக... தமிழகத்தில் திமுகவின் அசைக்க முடியாத ஓட்டு வங்கியாக இருப்பது இஸ்லாமியர்களின் வாக்குகள்தான்...
இதற்கு அஸ்திவாரமே கருணாநிதிதான்.. பெரும்பாலான இஸ்லாமிய பிரதிநிதிகளை, முக்கிய தலைவர்களை தன் பக்கத்திலேயே வைத்திருந்தார்.. அவர்களுக்கான முக்கியத்துவத்தை சரியான நேரத்தில் வழங்கி கவுரவப்படுத்தியே வந்துள்ளார். அன்று போட்ட அச்சாணிதான் இன்றும் உழல்கிறது..
அவ்வளவு ஏன், போன எம்பி தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் மொத்தமாக திமுக கூட்டணிக்கு வந்ததால்தான் 38 தொகுதிகளில் வெற்றியை பெற முடிந்தது.
இப்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி கொண்டுள்ளார்..
இதற்கான வேலைகளும் மும்முரமாகி வருகின்றன.. மறைமுக பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வருகிறது..
இந்த சமயத்தில்தான் சாதி ரீதியான ஓட்டுக்களை ரஜினிகாந்த் குறி வைத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாயின...
சாதி ஓட்டுக்களை தன் பக்கம் எடுக்கவே மண்டல வாரியாக வேலை நடந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற தகவல் வெளியானது.
இது சிஏஏ சட்டம் சம்பந்தமானது என்று மேலோட்டமாக பார்த்தாலும் ஓட்டு வங்கிக்கான தேடலாகவே தெரிகிறது.. திமுகவின் இஸ்லாமிய ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இஸ்லாமிய பிரதிநிதிகளை திருப்தி செய்து விட்டால் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்களை தன் பக்கம் இழுக்கலாம் என்பது ரஜினி தரப்பின் பலே பிளானாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஆக மொத்தம் ரஜினி, திமுகவின் அடிவயிற்றிலேயே கையை வைப்பதுபோலதான் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்!