குருவிகளுக்கு உடந்தை... சுங்க அதிகாரிகள் கைது..!

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த குருவிகளுக்கு உடந்தையாக இருந்த 3 சுங்கத்துறை அதிகாரிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். 


வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் வேடத்தில் தங்க கட்டிகளை கடத்திவரும் கடத்தல் குருவிகளால் இந்த தொழில் ஜரூராக நடந்து வருகிறது.


பயணிகள் உடைமைகளை சோதனை செய்து கடத்தல் குருவிகளை பிடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலுக்கு கமிஷன் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருப்பதால் தினந்தோறும் கோடிக்கணக்கில் மதிப்புடைய கடத்தல் தங்கம் வந்து குவிகிறது.


அப்படி கடத்தல் குருவிகளுக்கு உடைந்தையாக இருந்து பல நாள் தப்பி வந்த சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் தற்போது சிக்கியுள்ளனர்.


சென்னை விமான நிலையத்தில் மலேசியா, இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தபடுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதனையடுத்து கடந்த 19ம் தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 நாடுகளில் இருந்தும் 18 பேர் 5 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 12 கிலோ 700 கிராம் தங்கம் கடத்தி வந்தனர்.


அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் வருவாய்ப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துவர முற்பட்டபோது சுமார் 50 பேர் அதிகாரிகளை சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர்.


அந்த சந்தர்ப்பத்தில் தங்கம் கடத்தி வந்த குருவிகள் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். தாக்குதல் நடத்திய கடத்தல் குருவிகளிடம் இருந்த தங்கத்தை வாங்கிச் செல்ல வந்த கும்பலை விமான நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.


இதனிடையே தப்பிச் சென்ற குருவிகளில் 13 பேர் வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் தாமாகவே வந்து நேரில் ஆஜராகினர்.


அவர்களிடம் நடத்தபட்ட விசாரணையில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ராஜன், விகாஷ் சர்மா ஆகியோர் தங்க கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் சுங்கத்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சதீஷ்குமார் என்பவர் இந்த கடத்தலுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டதும் தெரியவந்தது.


கடத்தலுக்கு நல்ல கமிஷன் கிடைப்பதால் வேலையை விட்டுவிட்டு, முழுநேரமாக கடத்தலுக்கு உடந்தையாக செயல்படுவதை அவர் வேலையாக செய்து வந்துள்ளார்.


தினமும் எந்த பயணிகள் தங்கம் கடத்தி வருகிறார்கள் என்ற விவரங்களை பணியில் இருக்கும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து கமிஷன் பெற்று வந்துள்ளார்.


இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 சுங்கத்துறை அதிகாரிகளும், 13 கடத்தல் குருவிகளும் எழும்பூர் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


இவர்களை வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.


மேலும் தலைமறைவாக உள்ள 5 கடத்தல் குருவிகளை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)