நாடகம் நடித்த பள்ளி மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

குடியுரிமை சட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து நாடகம் நடித்த பீதர் பள்ளி மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளி மாணவர்களிடம் போலீஸார் 9 நாட்களாக விசாரணை நடத்தி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள சாஹீன் பள்ளியில் கடந்த 21-ம் தேதி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் இடம்பெற்ற நாடகத்தில், குடியுரிமை சட்ட விவாகரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையிலான வசனங்களை மாணவர்கள் பேசி நடித்தனர். இந்த நாடகத்தின் வீடியோ காட்சி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது.


இதுகுறித்து கடந்த 26-ம் தேதி பாஜக பிரமுகர் நீலேஷ் அளித்த புகாரின் பேரில், பீதர் போலீஸார் ஷாஹின் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கினை பதிவு செய்தனர். நாடகத்தை இயக்கியதாக பள்ளியின் உருது ஆசிரியர் பரீதா பேகம், அதற்கு வசனம் எழுதியதாக மாணவியின் தாயார் நபுன்னிசா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


இதையடுத்து, பீதர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பசவேஸ்வரா தலைமையிலான போலீஸார் கடந்த 9 நாட்களாக பள்ளி ஊழியர்கள், நாடகத்தில் நடித்த மாணவர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களிடம் சீருடை அணிந்தவாறு போலீஸார் விசாரணை நடத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


இதுகுறித்து, கர்நாடக குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மாரிசாமி கூறியதாவது: கடந்த 9 நாட்களில் மட்டும் 85 மாணவர்களிடம் தொடர்ந்து 5 முறை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.


குழந்தைகள் நல சட்டப்படி பள்ளி மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்துவதே சட்டதுக்கு எதிரானது. அதிலும் 16 வயதுக்கு குறைவான பள்ளி மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்வதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.


இந்த விவகாரத்தில் தேசிய மற்றும் கர்நாடக குழந்தைகள் நல உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு