ஊட்டி அருகே 4 மணி நேரம் வேனோடு தத்தளித்த டிரைவர்

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகில் உள்ள மசினகுடி சிங்காரா பகுதியில் உள்ள மின்வாரிய சுரங்கப்பாதையில், நேற்று முன்தினம் மாலை சிறிதளவு தண்ணீர் வெளியேறியுள்ளது. இதைப் பார்த்த ஒருவர், தனது வாகனத்தை [மஸ்தா வேன்] சுரங்கப்பாதை முன் நிறுத்தி சிறிதளவு வெளியேறிய நீரில் அதைக் கழுவிக்கொண்டிருந்தார்.


கண் இமைக்கும் நேரத்தில் சுரங்கப்பாதையிலிருந்து காட்டாற்று வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறியது. என்ன செய்வதென்று தெரியாத வாகன ஓட்டுநர், தட்டுத்தடுமாறி வாகனத்தின் அருகில் சென்று வாகனத்தைப் பிடித்து உள்ளே ஏறிவிட்டார்.


நீரோட்டம் அதிகரிக்க அதிகரிக்க வாகனத்தை ஆட்டம் காணச்செய்தது. இவரால் வாகனத்தைக் கிளப்ப முடியவில்லை . யாராவது உதவுமாறு சத்தமிட, அருகில் உள்ள ஆச்சக்கரை கிராம மக்கள் சிலர் வந்து பார்த்து, வாகனம் நீரில் அடித்துச் செல்லாதவாறு கயிற்றை சுரங்கப் பாலத்தில் பிணைத்துக் கட்டினர். அதிக அளவு நீர் வெளியேறிக்கொண்டிருந்ததால் ஓட்டுநரால் வாகனத்தை விட்டு வெளியேற முடியவில்லை.


மக்கள், மசினகுடி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸாரும் பொதுமக்களும் வேனை கயிறு கட்டி மீட்க முயன்றனர். ஆனால், அதிக அளவு தண்ணீர் வெளியேறியதால் அவரை மீட்க முடியவில்லை . அடுத்து, சிங்காரா மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டுகோள் விடுத்தனர்.


மின் உற்பத்தி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதனால் சுரங்கப்பாதையில் வெளியேறும் நீரின் அளவு குறைந்தது. இரவு 8.30 மணிக்கு வாகனத்தையும் ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டனர்.


இதுகுறித்து ஊர் மக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் தமிழக மின்வாரியத்தின் நீர்மின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.


மின் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர், 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை வழியாகக் கொண்டுவரப்பட்டு, இந்த இடத்தில் வெளியேற்றப்படுகிறது.வழக்கமாக மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை இந்த சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படும். அப்போது, அந்த இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என சிங்காரா மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருந்தும் ஒரு சிலர் வந்து இப்படி மாட்டிக்கொள்கின்றனர்" என்றனர்.


இது குறித்து போலீஸார், இந்தப் பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மசினகுடி பகுதியைச் சேர்ந்த சில வாகன டிரைவர்கள், மின்வாரியத்தின் எச்சரிக்கையை மீறி வாகனங்களை நிறுத்திக் கழுவுகின்றனர்.


அதனால், சுரங்கப்பாதையில் திடீரென வெளியேறும் தண்ணீரில் சில வாகனங்கள் சிக்கி, பிறகு மீட்கப்பட்டுள்ளன. மசினகுடியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 28) என்ற டிரைவரை 4 மணி நேரம் போராடி மீட்டோம். இனி இந்தப் பகுதிக்கு யாரும் வராதவாறு தடுக்கப்படும்" என்றனர். இந்தச் சாலையை முழுமையாக மூட வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு