டெல்லி: டெல்லியில் கலவரங்கள் கட்டுமீறி செல்லும் நிலையில் நான்கு ஏரியாக்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இன்றும், வட கிழக்கு டெல்லி பகுதியில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த கலவரங்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 135 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் போலீஸ் கான்ஸ்டபிளும், ஒருவர்.
இந்த நிலையில் டெல்லி பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருந்தார்.
இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர், டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார் அமித்ஷா.
இந்த ஆலோசனைகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், கலவரத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தேவைப்பட்டால், ராணுவத்தை வரவழைக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
உள்துறை அமைச்சகம் இவ்வாறு பல ஆலோசனை கூட்டங்களை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், கலவரம் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் டெல்லியின் நான்கு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, இன்று மாலை, காவல்துறை அறிவித்துள்ளது.
முஜ்பூர், ஜப்பாராபாத், சாந்த்பாக் மற்றும் கரவால் நகர் ஆகிய நான்கு ஏரியாக்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசியல் கட்சியினரும் பொது மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, வடகிழக்கு டெல்லியில், கலவரக்காரர்களை கண்டதும் சுட இன்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம், டெல்லியில் நடைபெற்றுவரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், எனவே இது தொடர்பாக கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது