நம்பிய தேர்வு முறை தான் உங்களை ஒரே போடாக போட்டு முடங்க வைத்து இருக்கிறது.

போட்டு முடங்க வைத்து இருக்கிறதுஅரையணாவா இருந்தாலும் அரசாங்க வேலை என்ற பழமொழி இன்றல்ல பல நூறாண்டு காலத்திற்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்திய வாசக மொழி மட்டுமல்ல பல குடும்பங்களில் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது.


மேலும் அரசாங்க வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாட்டம் என்கிற சொல்லாடல் தற்போது நடைபெற்றுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டின் மூலம் வெளியே தெரிய தொடங்கி விட்டது. மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்ததோடு இடைத்தரகர் ஒருவரையும் கைது செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் தேர்வு முறைகேடு தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது.


இதில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள். குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான தோடு அதன் மதிப்பீடு தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த தேர்வர்கள் மீதும் சந்தேகங்களை எழுப்பும் விதமாக அதன் விடைத்தாள்கள் அமையப்பெற்றிருந்தது.


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர்.


முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இதனால் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தத் தொடங்கிய டிஎன்பிஎஸ்சி, அதில் முறைகேடு நடந்ததை உறுதி செய்தது.


இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் என 5 மாவட்டங்களில் நடத்தி வருகின்றனர்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இரண்டு வட்டாட்சியர்கள் உள்பட பலபேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த விவகாரத்தில், பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தித்துறை உதவியாளர் திருக்குமரன், மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


அதேபோல், கடலூரைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இடைத்தரகரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நெல்லை மா வட்டம் விஜயாபதியைச் சேர்ந்தஐய்யப்பன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அரசியல் புள்ளிகள் சிலருடன் நெருக்கமாக ஐய்யப்பன் இருந்து வருவதாகவும், இடைத்தரகராக அவர் செயல்பட்டார் என்றும் கூறப்படுகிறது.


குரூப் 4 தேர்வில் மாணவர் ஒருவரிடமிருந்து ரூ.12 லட்சம் பெற்றுக்கொண்டு உதவியதாகவும் அவர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதனால், குரூப் 4 தேர்வைத் தாண்டியும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் முக்கிய நபர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.


அவர்களுக்கு வாழ்நாள் தடைவிதித்து கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ் சாவூர் ஆகிய மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார்விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்


இந்நிலையில் டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தலைமறைவாக உள்ள தேர்வர் முத்துராமலிங்கம் உள்பட பலர் இந்நிறுவனத்தில் படித்தது அம்பலமாகி இருக்கிறது. ஏற்கனவே வங்கி தேர்வு முறைகேட்டில் சிக்கிய நிறுவனம் தற்போது குரூப் 4 தேர்வு முறைகேட்டிலும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விறுவிறுப்பு அடைந்துள்ளது.


இதில் முதல் ஆளாக சிக்கியவர் திருவராஜ் என்பவர் சிவங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்தவர். குரூப்4 தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது மார்க் வைத்துதான் இந்த விவகாரமே வெளிப்பட தொடங்கியது. திருவராஜ்க்கு கல்யாணமாகி 3 மகள்கள் உள்ளனர்.இவர் ஒரு விவசாயி தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்.


ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிறைய ஆட்டுக்கிடைகள் வைத்திருந்ததாகவும் சொல்கிறார்கள். இவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மேல் ஒரு ஆசை போல தெரிகிறது.மொத்தம் 7 முறை இந்தத் தேர்வை எழுதியுள்ளார்.. 7 முறையுமே ஃபெயில் ஆகிவிட்டார்.


அப்படிப்பட்ட திருவராஜ், இந்த முறை பாஸ் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை .. மாநிலத்திலேயே முதல் இடம் என்பதுதான் பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. இந்த தேர்வு எழுத எந்த பயிற்சி மையத்திலும் ரொம்ப காலம் சேர்ந்து படிக்கவும் இல்லை . அதுவும் நீண்ட காலம் பயிற்சியும் எடுக்கவில்லை .


சிவகங்கையை சேர்ந்த இவர் 7 முறையுமே அங்குதான் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் இந்த முறை மட்டும் ராமேசுவரத்தில் எழுதி இருக்கிறார். ரிசல்ட் பார்க்க சிவகங்கை இ சேவை மையத்திற்கும் சென்றிருக்கிறார்.


அங்கு போய் எப்படி ரிசல்ட் பார்ப்பது என்றுகூட தெரியாமல், பணியில் இருந்த ஒரு பெண்ணிடம் தன்னுடைய மார்க் எவ்வளவு என்று பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போதுதான், அவர் பிறந்த தேதி சமாச்சாரம் வெளியே வந்துள்ளது..


46 வயசில எப்படி உங்களை தேர்வு எழுத அனுமதிச்சாங்க என்று அந்த பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு "உன் வேலையை பார். அது உனக்கு தேவையில்லாதது என்றாராம் திருவராஜ்.. அந்த பெண் மார்க், வயது விவரங்களை பகிர போய்தான் எல்லாருக்கும் விஷயம் தெரிந்து வெடித்துள்ளது. இது சம்பந்தமாகதான் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.


நேரத்தையும் கடின உழைப்பையும் கொட்ட வேண்டாம். குறுக்கு வழி இருக்கவேயிருக்கிறது. நான்கு வழி, எட்டு வழிச் சாலைகளுக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலை. குடும்பத்தில் இரண்டு உயிர்களை போராட்டங்களிலோ விபத்துக்களிலோ பலி கொடுத்தால் அரசு வேலை.குடும்பத்தில்


ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி இறந்து போனால் அரசு வேலை.லஞ்சம் கொடுத்தால் அரசு வேலை என்பதின் பொறுப்புணர்வினை மறந்து போன மக்கள் நடுவே பேரதிசயமாக இம்முறை தான் கணினி முறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் புரிய வைத்து தேவையான விழிப்புணர்வினை தேர்வர்களிடையே ஏற்படுத்தி , குரூப் 4 தேர்வுகள் நடந்தேறின.


கேட்பதற்கே மூச்சு முட்டுவதால் குறுக்கு வழி தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் டிஜிட்டல் டிஜிட்டல் எனும் கூப்பாடு வீண் என்றே தோன்றுகிறது. தேசத்தின் செயல்பாடுகளின் மேல் சாமான்யனுக்கு நம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக அவ நம்பிக்கையையே வளர்க்கிற இச்செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது.


ஊடகங்களில் பார்வை சென்றாலே முக்காடிட்டு அழைத்துச் செல்லப்படுகின்ற சமூக வழிகாட்டிகள், குற்றவாளியென்று அடையாளம் காணப்படுகிறவனுக்கு மட்டுமே அல்ல, அறிவார்ந்த செயல்திறனை உறங்க வைத்தவன் தான் முறைகேட்டிற்கு தன்னை அடகு வைக்கிறான்.


வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் அடிப்படை வாழ்வாதார போராட்டத்தில் இந்தியா (வல்லரசு?) எத்தனை கழிமட்ட நிலையில் இருக்கிறது என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டு இந்த முறைகேடு.காசென்றால் வாய் பிளக்கும் எத்தகைய கீழ்நிலைக்கும் இறங்கி வரும் அதிகாரிகளும் இடைத்தரகர்களும் நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இந்த முறைகேடு.


இப்படி குறுக்கு வழியில் தான் தட்டச்சராக இளநிலை உதவியாளராக ஆக வேண்டும் என்றால் இளையோரின் முதுகெலும்புகள் எங்கே முட்டுக் கொடுக்கப் பட்டுள்ளது..? சுயமாக முயன்று முன்னேற முடியாதவர்கள்.. என்ன சாதிக்கப் போகிறார்கள்.


நாளைய நெருக்கடிகளை, சவாலான பிரச்சனைகளை எவ்விதம் எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எல்லோரிடமும் எழத் தொடங்கி உள்ளது. டி என் பி எஸ் சி க்கு எனது கேள்விகள் என்னவென்றால், ஒரு காலத்தில் அரசு வேலையே கானல் நீராக இருந்த சமயத்தில் நன்னீர் ஊற்றாக புதுமைகளை கொண்டு வந்த பெருமை உங்கள் ஆணையத்திற்கு உண்டு. கடந்த 7 வருடங்களாக தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் நேர்மையாகப் படித்து தேர்வாணையம் மூலம் இன்று அரசுப் பணி பெற்று சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்து வருவதில் சந்தேகம் ஏதும் இல்லை .


அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலமாக இயற்றப்பட்ட அதிகாரமிக்க ஆணையம் என்று பெயர் பெற்ற நீங்கள் குரூப் 1 முதல் குரூப் நான்கு வரை மற்றும் துறை தேர்வுகளை செம்மையாக நடத்தி அவ்வளவு பணியையும் அசால்ட்டாக முடித்து வருகிறீர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வை கூட 16 லட்சம் பேர் எழுதி அதன் தேர்வு முடிவுகளை வெறும் 72 நாட்களுக்குள் வெளியிட்டது உலக சாதனை தான். ஆனால் அந்த சாதனையில் பல சோதனைகளும் பல வேதனைகளும் இருக்கும் என்று நீங்களே கனவில் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.


ஆம்.. ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியதோடு மட்டும் அல்லாமல் இடி மேல் இடி இறங்கியது போல இந்த முறைகேடுகள் உங்கள் மீது மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கே நீங்கள் வேகமாக செயல்பட்டடீர்களோ அங்கே சறுக்கியும் இருக்கிறீர்கள். முக்கியமாக இந்த முறைகேட்டைக் கண்டுபிடித்தது நீங்களே அல்ல. நீங்கள் செய்து இருக்க வேண்டிய இந்த வேலையை சமூக ஊடகங்கள் செய்து அதன் மூலமாக தான் உங்களுக்கே தெரிய வந்து இருக்கிறது என்பது தான் வேதனைப்படும் விஷயம்.


எதார்த்தம் என்னவெனில் நீங்கள் அதிகமாக நம்பும் ஊழியர்களே உங்களை ஏமாற்றி கொண்டு இருந்து இருக்கிறார்கள். நீங்கள் முறைகேடு நடக்கவே வாய்ப்பில்லை என்று நம்பிய தேர்வு முறை தான் உங்களை ஒரே போடாக போட்டு முடங்க வைத்து இருக்கிறது. நீங்கள் அதிகம் நம்பிய வேகமே தான் வேகத்தடையாக மாறி இருக்கிறது.


நீங்கள் புகைப்படம் கொண்டு ஓஎம்ஆர் விடைத்தாள் அறிமுகபடுத்தினால் முறைகேடு நடக்காது என்று நம்பியதையே பொய்த்து போகச்செய்து இருக்கிறார்கள் கயவர்கள். அதுவும் நீங்கள் அறிமுகப்படுத்திய முதல் தேர்விலேயே (GROUP2A,2017) என்பது தான் வாயை பிளக்க வைக்கும் ஆச்சர்யம். நீங்கள் மதிப்பெண் தரவரிசையை PDF வடிவில் SSC போன்றோ அல்லது UPSC போன்றோ எல்லா தேர்விலும் வெளியிட்டு இருந்தால் இந்த முறைகேட்டை 2017 லேயே உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும் எங்களால் கட்டாயம் அப்போதே கண்டுபிடித்து இருக்க முடியும். ஏனெனில் கயவர்கள் எடுத்த மதிப்பெண்கள் எல்லாம் கொஞ்ச நஞ்சம் அல்ல.


போட்டி தேர்வுக்கு உண்மையாக படித்தவர்களுக்கு தெரியும் பத்து மூளை கொண்டு ஆண்டவன் நம்மை படைத்தாலும் அறிவியல் முதல் அரசியல் சாசனம் கொண்ட 10 வெவ்வேறு பாடங்கள் இருக்கும் கேள்வித்தாளில் அவ்வளவு கேள்விகள் சரியாக குறிப்பது சாத்தியம் இல்லை என்று. மேலும் நீங்களே ஒவ்வொரு தேர்விலும் 10 கேள்விகள் வரை தப்பு தப்பாக கேட்கும்போது அது சாத்தியமே இல்லையே. 2017 குரூப் 2A வில் ஒருவர் 196 கேள்விகளும் குரூப் 4ல் ஒருவர் 193 கேள்விகளும் சரியாக விடைகளைக் குறித்தால் உங்களுக்கே சந்தேகம் வந்து இருக்க வேண்டாமா? அப்படி வந்திருந்தால் இவ்வளவு பெரிய அவமானமும் அசிங்கமும் உங்களுக்கு தற்போது வந்து தாக்கியிருக்காது. இது போன்று நீங்கள் கண்டுபிடிக்க முடியாத பட்டியல் ஏராளம் ஏராளம். அதை ஒரு ஆராய்ச்சி கட்டுரையாகவே வெளியிடலாம்.


எங்களைப் பொறுத்தவரை வெளிப்படையாக இருப்பது வெறுமனே ஓஎம்ஆர் சீட்டில் புகைப்படமும் ஆன்சர் கீயை வெளியிடுவது மட்டும் அல்ல. பைனல் கீ என்ன, தேர்வு முடிந்த உடன் கார்பன் காப்பி விடைத்தாளை அறிமுகபடுத்துவது, தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு View Your OMR Sheet என்பதை டவுன்லோட் செய்து பார்க்க வைப்பது, ஒவ்வொரு இன சுழற்சியில் கட் ஆப் மதிப்பெண் என்ன என்று வெளியிடுவது,பெயர், மதிப்பெண்கள் கொண்ட ஒரே றிஷீதி தரவரிசை பட்டியல் வெளியிடுவது, கலந்தாய்வு முடிந்த பிறகு Nomination Status என்ற பட்டியல் துறைகளுக்கு அனுப்பபட்டதின் தற்போதய நிலை என்பவை தான்.


இவ்வளவும் வெளிப்படையாக செய்தால் வழக்குகள் அதிகமாகி தேர்வு நிலுவையில் இருக்கும் என்பதெல்லாம் சப்பை கட்டு. ஏனெனில் “உண்மையும் நேர்மையும் பிழையும் இல்லாத போது வழக்குகள் இல்லாமல் போகுமே” தவிர அதிகமாகாது என்பது நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?


ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில் ஒட்டு மொத்த ஆணையமும் ஊழலில் புரையோடவில்லை என்பதுதான். ஏனெனில் எங்களுக்கு தெரிந்த ஒரு குப்பனோ சுப்பனோ கண் முன்னே வெற்றி பெறும்போது உங்கள் நேர்மைக்கு அவர்கள் சாட்சியாகிறார்கள். ஆனால் அதையும் தட்டிப் பறிக்க ஒரு கழுகுக் கும்பல் காத்து கொண்டே இருக்கிறது என்பது தான் இப்போது உங்களுக்கு ராமேஸ்வரம் விடுத்து இருக்கும் எச்சரிக்கை மணி. இன்று 99 என்பது நாளை 9999 என்று மாறினால் எங்களை போன்ற சாமானியன் கடைசி வரை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு இல்லை அது கூட கிடைக்காமல் புத்தகத்தோடு கடைசி வரை நம்பிக்கையோடு படித்து கொண்டே இருந்து கடைசியில் புத்தகத்தோடு சமாதி ஆவது தான் அவன் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி என்று மாறிவிடும்.


இந்த ராமேஸ்வரம் சர்ச்சையின் விசாரணையில் எந்த பெரிய திமிங்கலம் சிக்குகிறதோ அல்லது எந்த நெத்திலி மாட்டுகிறதோ என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மீண்டும் அந்த ஊழல் மீன்கள் கடலில் இல்லாதவாறு சல்லடை போட்டு கடலை விட்டு வெளியே தூக்கி எறிவது உங்கள் பொறுப்பு. மீண்டும் அதே கடலில் அதை நீந்தவிட்டால் நல்ல மீன்களை விழுங்க இப்போது இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் வருவதை தடுக்க முடியாமல் போகலாம். ஏனெனில் நாங்கள் நிராயுதபாணியாகத்தான் எப்போதும் இருக்கிறோம். எங்களுக்கு அறிவே ஆயுதம். புத்தகங்களே கவசம்.


எனவே நீங்கள் இனி செய்யப்போகும் நடவடிக்கை தான் மிக முக்கியமானது. நம்பிக்கையை மீட்டு எ டு ப் ப து மட்டுமல்லாமல் புதிய அஸ்திவாரத்தைப் போட வேண்டிய நேரம் இது. என்ன சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் தேர்வர்கள் சார்பில் அவர்களின் நலன் கருதி எடுக்கும் முடிவே நாளைய அரசாங்க இயந்திரத்தை குறையில்லாமல் வடிவமைக்க இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பழைய இயந்திரம் வழக்கொழிந்துவிட்டது. இனிமேலும் அதற்கு எண்ணை போட்டு ஓட்ட நினைக்க வேண்டாம். ஏற்கனவே அது பல ஓட்டைகளோடு தான் இருந்திருக்கிறது.


எனவே இனிமேலாவது தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு இருட்டறையில் ஒரு கோப்பை தேநீர் கொண்டு , படிக்க கூட இடம் இல்லாமல் பூங்காவில் இருந்து கொண்டும், ரயில்வே நிலையத்தில் இருந்து கொண்டும், திறமையும் உழைப்பையும் மூலதனமாக வைத்துக் கொண்டு பல கனவுகளோடு படித்து கொண்டு இருக்கும் போட்டித் தேர்வு இளைஞர்களை ஏமாற்றுபவர்களையும் அதற்கு துணை போகிறவர்களையும் உச்ச தண்டனையை வழங்கி தேர்வாணையம் அதன் மாண்பைக் காக்க வேண்டும். ஏனெனில் அந்த கனவில் ஒரு தலைமுறையே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.....


இனி என்றும் தவறுகள் நடக்கக்கூடாதெனும் எதிர்பார்ப்பில்.. பல லட்சம் இளைஞர்களின் குரலாக..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு