நம் டிஜிட்டல் வாழ்க்கைக்கும் `உயில்' அவசியம்! எழுதுவது எப்படி...

இன்று உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருவேறுவித வாழ்க்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம்.


நாம் இறந்த பிறகு, நமது டிஜிட்டல் வாழ்க்கை என்னாகும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


அந்த அளவுக்கு முக்கியமா அது எனக் கேட்கத்தான் தோன்றும். 2007-ல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சாதாரண நபருக்கு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வங்கிக் கணக்கு எனச் சராசரியாக 25 டிஜிட்டல் கணக்குகள் உள்ளன எனக் கூறியுள்ளது.


2007-லேயே சராசரி 25 என்றால் இப்போது எவ்வளவு இருக்கும் என கணக்கிட்டுப்பாருங்கள்.
இன்று, கூகுள் சம்பந்தப்பட்ட நிறைய கணக்குகளை நாம் பயன்படுத்துகிறோம்.


கூகுளில் நம்பகமான கணக்கு ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால், நம் கணக்குகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் நாம் தேர்ந்தெடுத்தவரின் கணக்கிற்குச் சென்றுவிடும்.


நாம் இறந்துவிட்டோம் என்பதை கூகுள் எப்படி கண்டறியும்? குறிப்பிட்ட காலம் நம் கணக்கு திறக்கப்படாமல் இருக்க வேண்டும். அதன் பிறகுதான் நாம் தேர்ந்தெடுத்த கணக்கிற்கு நம் தகவல்கள் அனுப்பப்படும். அது எவ்வளவு காலம் என்பதை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.



ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, உங்கள் தகவல்களை யாருக்கும் பகிர முடியாது. நாம் இறந்துவிட்டால், நமக்கு நெருக்கமானவர்கள் மூலம் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நம் கணக்கை நிரந்தரமாக அழிப்பதுதான் ஒரே வழி.


இந்த டிஜிட்டல் கணக்குகளில் சில சாதாரணமாக இருந்தாலும், சிலவற்றில் நமக்கு மிகவும் முக்கியமான தகவல்கள் இருக்கும்.


நாம் இல்லை எனும்போது, மூன்றாம் நபரால் நம் தகவல்கள் கைப்பற்றப்படும் வாய்ப்பு அதிகம். எனவே, நம்முடைய கணக்குகளை நாம் இறந்த பிறகு மூடவோ அல்லது பராமரிக்கவோ முறையான செயல்முறையைச் செய்துவைக்க வேண்டும்.



ஃபேஸ்புக்கில் நம் கணக்கை, நாம் இறந்த பிறகு யார் பராமரிக்க வேண்டும் எனப் பதிவுசெய்து வைக்கலாம். அதன்மூலம், நம் கணக்கை அவர்கள் நிர்வகிக்க முடியும். ஒன்று, நம் கணக்கை அழித்துவிடலாம் அல்லது அதை ஒரு நினைவாக அப்படியே வைத்திருக்கலாம். 


நினைவாகஅந்தக் கணக்கை வைத்திருந்தால், நம் நண்பர்களுக்கு மட்டும் அந்தக் கணக்கு தென்படும். அப்படி யாரும் நிர்வகிக்க வேண்டாம் என்றால், நாம் இறந்தபிறகு நம் கணக்கை அழித்துவிடும் வகையில் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.


தாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது.


இதற்காகப் பல இணையதளங்கள் மற்றும் செயலிகள் உள்ளன. நிஜ வாழ்வில் நாம் உயில் எழுதி வைப்பதைப் போலத்தான் இதுவும். ஆஃப்டர் நோட் (Afternote) என்ற இணையதளம் நமது ஆன்லைன் மற்றும் வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்டுகள் மற்றும் நாம் நமது நெருக்கமானவர்களுக்குச் சொல்ல நினைக்கும் விஷயங்கள் எனப் பலவற்றையும் தங்கள் பக்கத்தில் சேமித்து, நாம் இறந்த பிறகு நமக்கு நெருக்கமானவர்களுக்கு அது சென்று சேரும் வகையிலான வசதிகளைக் கொடுக்கிறது. நாம் இறக்கும் முன் எழுதி வைத்துச் செல்லும் கடிதத்தின் டிஜிட்டல் வெர்ஷன்தான் இது.


இதன்மூலம், நம் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், நம் நெருக்கமானவர்களுக்குத் தேவையான தகவல்கள் நம்மிடமிருந்து நம் பிரிவுக்குப் பின் அவர்கள் அதை அணுகமுடியாமல் போவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் முடியும்.


இவையெல்லாம் இப்போது அவசியமா என்றால், டிஜிட்டல் உலகிலேயே நாம் வாழத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவும் அவசியமே.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்