உயிரோடு விளையாடும் தமிழக அரசு : மாஸ்க் கூட இல்லாத அவலம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் வெளிநாட்டு பயணிகளும் தமிழகத்தை சேர்ந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.


இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சீனாவிலிருந்து வந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அவலம் நிலவுகிறது.


சீனாவில் இருந்து வந்த 2 பேர் ஓட்டலில் தங்கியிருந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு கடும் காய்ச்சல் சளி தொந்தரவு இருந்ததால் ஓட்டல் நிர்வாகம் கொரோனா அறிகுறி இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்கள் இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி உள்ளனர்.


ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் அடிப்படை வசதியான ‘மாஸ்க்’ கூட இல்லாமல் என்ன செய்வது என்று மருத்துவர்கள் தவித்து வருவதாகவும், எந்த அடிப்படை பாதுகாப்பு இல்லாமல் தனி அறையும் ஏற்பாடு செய்யாமல், சீனாவில் வந்த இரண்டு பேரை தங்க வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.