கவரிங் நகையை அடமானம் வைத்து கடன் பெற்று மோசடி செய்ததாக 25 பேர் மீது வழக்கு..

சேலத்தில் உள்ள தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்திருப்பது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் 4 சாலை காமராஜர் காலனி பகுதியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.


இதில் கடந்த மாதம் 22ம் தேதி நகைகள் ஏலம் விடப்பட்டன. அப்போது நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மற்றும் நகையை அடமானம் வைத்த சிலர் வரவில்லை.


இதனால் சந்தேகமடைந்த கிளை மேலாளர் தெய்வமணி தலைமை அலுவலகத்திற்கு சென்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது, வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கி வருகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் சிலர் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளனர். இதற்கு எங்கள் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் உடந்தையாக இருந்துள்ளார்.


எனவே போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டிருந்தார்.


இதனையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட கமி ஷனர் செந்தில்குமார், நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார் அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி, வங்கி நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட மொத்தம் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


அப்போது, வங்கியை சார்ந்த குழு, சீலிட்டு வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தபோது 24 பேரின் பெயரில், 4 கிலோ போலி நகைகளை வைத்து 94 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.


மேலும், தலைமறைவான சக்திவேலை காவலர்கள் தேடி வருகின்றனர். வாடிக்கையாளருக்கு சக்திவேல் உடந்தையாக இருந்தாரா? அல்லது வாடிக்கையாளரின் பேரில் சக்திவேல் மோசடி செய்தாரா? என பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.