அன்புச்செழியனுக்கு சொந்தமான அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணி முதல் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஏஜிஎஸ் நிறுவனத்தின்மீது எழுந்த வரிஏய்ப்புப் புகாரின் காரணமாக, வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கியுள்ளனர். காலை முதலே இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர்


சோதனை நடத்தினர். இதையடுத்து, ஃபைனான்ஷியர் அன்புச்செழியன் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாகத் தயாரித்த படம் 'பிகில்' என்பதால், நடிகர் விஜய்-யிடம் விசாரணையில் இறங்கியுள்ளது ஐ.டி டீம். அடுத்தடுத்த ரெய்டுகளால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஏஜிஎஸ் நிறுவனம், படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது. இன்று காலை முதலே அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், திரையரங்கம் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடந்துவருகிறது.


'திருட்டுப்பயலே', 'மதராசப்பட்டினம்', 'தனி ஒருவன்', 'அனேகன்', 'பிகில்' உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் கடைசியாகத் தயாரித்த படம், 'பிகில்'. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தந்தது. இந்நிலையில், வருமான வரிச் சோதனையில் ஏஜிஎஸ் நிறுவனம் சிக்கியுள்ளது.


மதுரையைச் சேர்ந்த ஃபைனான்ஷியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவகத்தில் சோதனை நடைபெறுகிறது. இவருக்குச் சொந்தமான சொத்துகள், சென்னை மற்றும் மதுரையில் உள்ளதால், தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். 'மதுரை அன்பு' என்று அழைக்கப்படும் சினிமா ஃபைனான்ஷியரான அன்புச்செழியன், மதுரை அ.தி.மு.க-வில் இளைஞரணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.


பணபலம், அரசியல் பின்னணி, மாவட்டச் செயலாளர்களைக் கைக்குள் வைத்திருப்பது என அரசியலில் பிஸியாக வலம்வந்து கொண்டிருக்கிறார் அன்பு. படம் தயாரிப்பதற்காகப் பல தயாரிப்பாளர்களும் இவரிடம்தான் பணம் வாங்குவார்கள். ஆனால், படத்தின் பூஜை, இசை வெளியீட்டு விழாக்கள், வெற்றி விழாக்கள் என எதிலும் தலைகாட்டாமல் இருப்பது இவரின் இயல்பு.


தயாரிப்பாளர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவினாலும், சரியான நேரத்துக்குள் பணம் வரவில்லையென்றால், அன்புவின் நடவடிக்கை வேறு மாதிரியாக மாறிவிடும் என்கிறார்கள். சினிமா ஃபைனான்ஷியர் தொழில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் செயல்பட்டுவருகிறார். இவருக்கு சென்னை, மதுரை உட்பட பல்வேறு இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. மதுரை தெற்குமாசி வீதியில், கோபுரம் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.


இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள், நான்கு பைகளில் முக்கியமான ஆவணங்களை அள்ளிச்சென்றனர். அதேநேரம், நடிகர் விஜய் தற்போது 'மாஸ்டர்' படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு, நெய்வேலியில் உள்ள என்எல்சி 2-வது சுரங்கப் பகுதியில் நடந்துவருகிறது.


நெய்வேலிக்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஜய்-க்கு நேரில் சம்மன் அளித்தனர். இதையடுத்து, விசாரணைக்காக நெய்வேலியிலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இதன் காரணமாக அவர் தற்போது நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்