சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு...
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட ஜமீன் பல்லாவரத்தில் சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தினர் மிகப்பெரிய வணிகவளாகம் ஒன்றை கட்டி வருகின்றனர். இந்த வணிக வளாகம் கட்டுவதற்கு பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அதிகாரிகளும் சட்டத்திற்கு புறம்பாக பல கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு முறைகேடாக அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
இதுசம்பந்தமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதுசம்பந்தமாக நாம் விசாரித்தபோது, பல்லாவரம் அருகில் ஜமீன் பல்லாவரத்தில் ஸ்ரீரத்னா அக்ஷயா எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும்சரவணா செல்வரத்தினம் ரீட்டெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ஒன்பது மாடியில் துணிக்கடை, திரையரங்குகள் உள்ளிட்ட வணிக வளாகம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த வணிக வளாகம் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறது. (எண். C 3(S) 12059/2018 Dated 21.08.2019)
பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த எம்.செந்தில் முருகன், சரவணா செல்வரத்தினம் நிறுவனம் தரைதளத்திற்கு கீழ் இரண்டு தளங்களும், தரைதளம் முதல் 5வது தளம் வரை துணிக்கடைக்கும், 6வது தளம் மற்றும் ஏழாவது தளத்தில திரையரங்குகள், எட்டாவது தளம் மற்றும் ஒன்பதாவது தளத்தில் அலுவலகத்துடன் கூடிய வணிக வளாகம் அமைத்துக் கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளருக்கு அனுப்பிய திட்ட அனுமதி கடிதத்தில் அனுமதி வழங்க ஆட்சேபனை இல்லை என்று எழுதி அனுப்பி இருக்கிறார்.
(ந.க.எண். 656012019/F1/04.04.2019) மேலும் அந்த கடிதத்தில் சரவணா செல்வரத்தினம் நிறுவனம் திரையரங்குகளுடன் கூடிய ஒன்பது மாடிகள் கொண்ட வணிக வளாகம் அமைக்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் கவுன்சில் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றாமல் துப்புறவு அலுவலரின் குறிப்புரையுடன் என்.ஓ.சி கொடுத்துள்ளதை பார்க்கும் போது முறைகேடு நடந்துள்ளதற்கு இது மேலும் வலுசேர்க்கிறது.
23.07.2019 ஆம் தேதி கொடுக்கப்பட்ட Revised Plan அடிப்படையில் இந்த தேதிக்குப் பிறகுதான் Airforce Station, பொதுப்பணித்துறை, தாம்பரம் வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை,சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, சுற்றுச்சூழல் மற்றும் பல்லாவரம் நகராட்சி ஆகிய துறைகளில் என்.ஓ.சி பெற வேண்டும்.
ஆனால் முன்கூட்டியே என்.ஓ.சி பெறப்பட்டதின் அடிப்படையில் சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு 9 மாடி கட்டிடம் கட்டுவதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்றே நமக்குப் புரியவில்லை .
பல்லாவரம் நகராட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டாட்சியரின் எல்லைக்குட்பட்டதால் சரவணா செல்வரத்தினம் நிறுவனம் கட்டும் 9 மாடி கட்டிடத்தில் திரையரங்குகள் அமைக்க காஞ் சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் என்.ஓ.வாங்கவில்லை.
அதேபோல் 18.09.2018 இல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் Panel Meeting இல் சரவணா செல்வரத்தினம் வணிக வளாக கட்டிடம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அப்போது சரவணா செல்வரத்தினம் கொடுத்த பிளானில் தரைதளத்திற்கு கீழ் இரண்டு அடித்தளம் மற்றும் 10 மாடி என்று கொடுத்திருந்தது. அந்த பிளானில் 5 இனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், பிளானில் 17 தவறுகள் இருப்பதாகவும், முடிவு எடுக்கப்பட்டது.
இதில் விதிமுறைகள், தவறுகள் முழுமையாக திருத்தப்படாத, மாற்றியமைக்கப்படாத நிலையில்தான் 21.08.2019 ல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி வழங்கியுள்ள து. (Item No. 17/243. File No. C3(S) 12059/2018) இந்நிலையில் சரவணா செல்வரத்தினம் நிறுவனம் கட்டிடம் கட்டுமான பணிகளை துவங்கி விட்டது.
பணிகளை துவங்குவதற்கு முன் திறந்தவெளி ஒதுக்கீட்டு பகுதிகளை ஒதுக்கீடு செய்து பல்லாவரம் நகராட்சியில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை .
இதுபோன்ற நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதா? என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள் உறுதி செய்யாத நிலையில் கட்டிடப்பணிகள் நடந்து வருகிறது.
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் நிபந்தனை கடிதங்களை கண்டுகொள்ளாமல் விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக சரவணா செல்வரத்தினம் வணிகவளாகம் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கட்டிட அனுமதி அளித்துள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அரசாணையை மதிக்காமல் சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு வணிகவளாகம் கட்ட அனுமதி வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தற்போதைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ், பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த செந்தில் முருகன், தற்போது பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருக்கும்.
மதிவாணன் மற்றும் பல்லாவரம் நகராட்சியின் முன்னாள் இன்னாள் அதிகாரிகள், மேலும் இவர்களை கட்டுப்படுத்தும் மாபெரும் பொறுப்பும், கடமையும் இந்தத்துறையின் அமைச்சரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக மக்களின் நலனை காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள துணைமுதல்வரின் துறையான வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையிலேயே அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சத்திற்கு வந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு... சரவணா செல்வரத்தினம் நிறுவனம் வணிகவளாகம் கட்டுவதற்கு முறைகேடாக அனுமதி பெற்று கட்டிடத்தை கட்டி வருகிறது. இதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் காத்திருக்கிறார்கள்.