15 நிமிடங்களாகக் குறைந்த 40 நிமிட பயணம் ! விமானத்தில் பறந்த உடல் உறுப்புகள்...!

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் சேலம் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு பெரும் சவால்களுக்கு இடையே கொண்டு செல்லப்பட்டன. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் சுரேந்தர். கடந்த 8ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புகையில் விபத்தில் சிக்கினார்.


சேலம் அரசு மருத்துவமனையில் அவரது உடலைப் பரிசோதித்து, மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்த மருத்துவர்கள், உடலுறுப்பு தானம் குறித்து சுரேந்திரின் பெற்றோரிடம் எடுத்துரைத்தனர். அவர்களும் சம்மதிக்கவே, உடனடியாக உடலுறுப்புகள் அகற்றும் அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் இறங்கினர். அவரது இருதயம், நுரையீரல், இரண்டு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன. அதற்குள் உடலுறுப்பு தானத்துக்கு விண்ணப்பித்திருந்த மருத்துவமனைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதன்படி சென்னை குளோபல் மருத்துவமனைக்கு இருதயம் கொண்டு செல்லப்பட்டது. நுரையீரல் மணிப்பால் மருத்துவமனைக்கும் சிறுநீரகங்களில் ஒன்று அதே மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் மற்றொன்று கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. 6 மணி நேரத்துக்குள் தானம் பெறுபவருக்கு இருதயம் பொருத்தப்பட வேண்டும் என்பதால் சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.


இதற்காக சேலம் - சென்னை இடையே இயக்கப்படும் ட்ரூஜெட் விமான நிர்வாகத்துக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், அரசு மருத்துவமனை முதல் - விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர போக்குவரத்தை சீர் செய்யத் தொடங்கினர். புதிதாக கட்டப்பட்ட இரண்டடுக்கு மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.


பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் இதே விமானத்தில் பயணிக்கவிருந்த நிலையில், அவரோடு சேர்த்து மற்ற பயணிகள் முன்னதாகவே விமானத்துக்குள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்ததும் உடனடியாக அதனை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டது.


அரசு மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையிலான 40 நிமிட பயண நேரம் போலீசாரின் துரித நடவடிக்கையாலும் வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பாலும் 15 நிமிடங்களாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது