மூக்கில் துணி, கழுத்தில் கயிறு!'- அதிர்ச்சியளிக்கும் துடியலூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்

கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு படித்துவந்த 6 வயது சிறுமி, கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதையடுத்து, அடுத்த நாள் வீட்டின் எதிரே துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை


மேற்கொண்டுவந்தனர். இதுதொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். சந்தோஷ் குமாருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதனிடையே, இந்த வழக்கில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக டி.என்.ஏ ரிப்போர்ட்டில் தெரியவந்தது. இதையடுத்து, மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க, வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று சிறுமியின் தாய் கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில், கோவை மாவட்ட குழந்தை தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் அனந்த நாயகி, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


இதையடுத்து, அனந்த நாயகி தலைமையிலான போலீஸ் டீம் வழக்கை மீண்டும் விசாரித்துவருகின்றனர். முக்கியமாக, இதில் சம்பந்தப்பட்டுள்ள மற்றொரு நபரைக் கண்டுபிடிப்பதற்குத் தீவிரம்காட்டிவருகின்றனர். இதற்காக சிறுமியின் உறவினர்கள், சந்தோஷ்குமாரின் நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.


இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். டி.என்.ஏ சோதனையில்தான் மற்றொரு நபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அதே டி.என்.ஏ சோதனை மூலமாகத்தான் அந்த நபர் யாரென்று கண்டுபிடிக்க முடியும். முதல்கட்டமாக, 5 பேரிடம் டி.என்.ஏ சோதனை செய்ய உள்ளோம். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்' என்றனர்.