மதுரை,கரிமேடு சந்தை ரசாயன மீன்களால் கொதித்த அதிகாரிகள்

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், நேற்றிரவு மதுரை கரிமேடு மொத்த மீன் சந்தையில் சோதனை நடத்தி, மீன்கள் கெடாமல் இருக்க ரசாயனம் செலுத்தப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் உணவுப்பிரியர்களான மதுரை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


ஆட்டுக்கறி, கோழிக்கறியைவிட கடல் மீன்கள் உண்பதால் கண் பார்வை உட்பட உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்களே ஆலோசனை கூறுவதால் தமிழகம் முழுதும் மக்கள் மத்தியில் கடல் மீன்களுக்கு அதிகப்படியான கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு மீன் உணவுப்பொருள்களை ஏற்றுமதி செய்வதைவிட உள்நாட்டு விற்பனையிலேயே நல்ல வருவாய் கிடைக்கிறது.


.`மீன்கள் கெடாமல் இருக்க ரசாயனம் கலப்பது சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது' என்றுதான் தகவல்கள் வெளியாயின.


ஆனால், தென் மாவட்டத்தின் பெரிய மீன் சந்தையான மதுரை கரிமேட்டிலும் மீன்களில் இதேபோன்று கலப்படம் நடப்பதாக மதுரை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குப் புகார் சென்றது.


இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான முப்பதுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கரிமேட்டிலுள்ள 53 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். நண்டு, இறால் உட்பட ஏராளமான மீன்களை அங்கேயே பரிசோதனை செய்தனர்.


அதில் 2 டன் அளவிலான இறால், நண்டு, மீன்களில் பார்மலின் கலந்திருப்பது தெரிய வந்தது. உடனே அவற்றை அங்கிருந்து அகற்றி அழிக்க உத்தரவிட்டனர்.


கரிமேடுமீன் சந்தையில் இது முதல் சோதனை என்பதால் வியாபாரிகளை எச்சரித்த அலுவலர்கள், ''வெளி மாநிலங்களிருந்து வருகின்ற மீன்களில்தான் இதுபோன்ற ரசாயனம் கலக்கப்படுகிறது.


அதனால் அப்படி வரும் மீன்களை திருப்பி அனுப்பிடுங்கள். நம்பி வரும் மக்களை ஏமாற்றாதீர்கள்.


விரைவில் இங்கொரு சோதனைக் கூடம் அமைத்து அதில் சோதனை செய்த பிறகே மீன்களை விற்பனை செய்யுங்கள்'' என்று அறிவுறுத்திச் சென்றனர்.


``ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகின்ற மீன்களில் யாரும் கலப்படம் செய்வதில்லை, வெளி மாநிலங்களிருந்து வருகின்ற மீன்களிலும் அல்லது இங்குள்ள சில மொத்த வியாபாரிகளும்தான் ரசாயனம் கலக்கிறார்கள்" என்று சில்லறை மீன் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


மதுரை நகரில் ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுகிறது என்ற தகவலால் மீன் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.