சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 23.5 சதவீதம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வெளியான புள்ளி விபரத்தின்படி, 2018ம் ஆண்டு 24 லட்சத்து 47 ஆயிரத்து 329 வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், கடந்தாண்டு விதிமீறல் தொடர்பாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு விதிமீறல் அபராதத் தொகையாக 27 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. அது கடந்த ஆண்டு 34 கோடியே 45 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது, 2019ம் ஆண்டு வசூலான அபராதத் தொகை 26.6 சதவீதம் அதிகமாகும். விதிமீறல்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும், வாகன விபத்துகளில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 2018ம் ஆண்டு சென்னையில் சாலை விபத்துக்களில் ஆயிரத்து 297 பேர் உயிரிழந்தனர்; 7620 பேர் காயமடைந்தனர். ஆனால், 2019-ம் ஆண்டு சாலை விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 252 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 6688 ஆகவும் குறைந்துள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாகவே, உயிரிழப்புகள் குறைந்ததாகக் கூறப்படுகிறது.