பாமாயில் இறக்குமதி செய்வதற்கு திடீர் கட்டுப்பாடு!

மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடால், பாமாயிலின் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்,அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் பொருளாதார நிபுணர்கள். பாமாயில் - ஹோட்டலில் சாப்பிடுபவர்களால் அதிகம் வெறுக்கப்படும் வார்த்தை இதுவாகத்தான் இருக்க முடியும். பாமாயிலில் சமைத்த உணவை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் நிறைய ஹோட்டல்கள் ’இங்கு பாமாயில் பயன்படுத்துவதில்லை’ என போர்டே வைக்கத் தொடங்கிவிட்டார்கள். பாமாயில் பயன்பாட்டால் உடல் நலத்துக்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், அடித்தட்டு ஏழை மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருள் பாமாயில்தான் என்பதை மறுத்துவிட முடியாது. இப்படி ஏழைகளின் வீட்டு சமையலறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாமாயிலை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு. ’காஷ்மீரை, இந்தியா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது’ எனப் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மதுக்கு இந்தியா கொடுத்த பதிலடியாக இது பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை மலேசியாவில் பணியாற்றிவரும் 5 லட்சம் இந்திய தொழிலாளர்களை பாதிக்குமென கூறும் ஒருதரப்பும் உள்ளது. இந்த திடீர் நடவடிக்கையின் காரணமாக இந்தியாவில் பாமாயில் தட்டுப்பாடு அதிகரிப்பதோடு அதன் விலையும் உயருமென எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆனால் மற்றொரு தரப்பினரோ மத்திய அரசின் தடை உத்தரவு உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு புத்துயிரூட்டி உள்ளதாகவும், அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்குமென்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்தியா கட்டுபாடுகளை விதித்துள்ள நிலையில் மலேசியா தனது பாமாயில் ஏற்றுமதிக்காக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே நீண்டகால நட்பு நாடாக இருந்த நேபாளம் தற்போது சீனாவின் பிடிக்குள் சென்றுள்ள நிலையில், 200 ஆண்டுகள் வியாபாரத் தொடர்புகள் உள்ள மலேசியாவுடனான பிரச்சினைகள் பேசித்தீர்க்கப்பட வேண்டும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்