சிறப்பு செயலி 'ஆவாஸ் ரீடர்' அறிமுகம் செய்தது பள்ளி கல்வித்துறை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழிகாட்டும், 'ஆவாஸ் ரீடர்' என்ற சிறப்பு செயலியை பள்ளி கல்வித்துறை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்று, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. குறிப்பாக நலத்திட்ட உதவிகளை அதிகளவில் வழங்கி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் கற்றலை ஊக்குவித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு புரிந்து கொள்ளும் பயிற்சி, மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் தேவைப்படுபவர்களுக்கு சற்கர நாற்காலி, காது கேட்கும் கருவி, கண்ணாடி, ஊன்றுகோல் போன்றவை வழங்கப்படுகின்றன. மனவளர்ச்சி குன்றியவர்கள், கை, கால் குறையுள்ளவர்களுக்கு தங்குமிடத்துடன் கூடிய சிறப்பு கல்வி அளிக்கப்படுகிறது. இத்துடன் ஆண்டுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன. முதல் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,000, 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.3,000, 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் நலவாரியங்கள் மூலமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கும் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் வகையில், 'ஆவாஸ் ரீடர்' என்ற என்ற சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித் துறையின் கோவை மாவட்ட முதன்மைக் கருத்தாளர் அகிலாண்டேஸ்வரி கூறியதாவது: மாற்றுத்திறனாளி மாணவர்களின் தனித்திறனை அடையாளம் காண்பதுடன், கற்றல் குறைபாட்டை நீக்கும் வகையில், மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் உதவியுடன் 'எம்.டி.ஏ. ஆவாஸ் ரீடர்' என்ற சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், இச்செயலியை தங்களுடைய ஆண்ட்ராய்டு போனில், பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இச்செயலியில் வாசிப்பு, கற்றல், எழுத்துக்களை அடையாளம் காணுதல், கணக்குகளுக்கு விடை கண்டறிதல், மாற்றுத்திறனாளிகள் கற்றல் திறனை அளவிடுதல் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நிறை, குறைகளை தெரிவிக்கவும் சிறப்பு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வகுப்பறை செயல்பாடு, மாணவர்களின் வாசிப்புத் திறன், செயலி மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்பு ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் வரவேற்புக்கேற்ப, இத்திட்டத்தை விரிவுப்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு முதன்மைக் கருத்தாளர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு