வருமானவரித்துறையினர் போல நடித்து பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

வருமானவரித்துறையினர் எனக்கூறி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நூர். காலை அவரது வீட்டிற்கு வந்த 4பேர் கொண்ட கும்பல், வருமானவரி துறையினர் என கூறிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வந்தவர்களில் இருவர் காவல்துறை சீருடையில் இருந்ததால், முகமது நூருக்கு சந்தேகம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், வீட்டிலிருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மற்றும் 7 சவரன் நகைகளை அவர்கள் எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த முகமது, கூடுதல் விவரங்களை கேட்டபோது, நகை மற்றும் பணத்துடன் அவர்கள் தப்பியோடினர். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.