நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவு

தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள அனைத்து வேகத்தடைகளையும் அகற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யும் விதமாக, சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற மத்திய அரசு சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் கால தாமதம், எரிபொருள் செலவு உள்ளிட்டவை இதன் மூலம் வெகுவாக குறைவதுடன், ஆம்புலன்ஸ்கள் உரிய நேரத்திற்குள் செல்லமுடியும் என கூறப்படுகிறது. மேலும், வேகத்தடைகளால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் தவிர்க்கப்பட்டு, வாகன ஓட்டிகள் தடையில்லாமல் பயணிக்கும் சூழல் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.