நல்லாசிரியர் விருதை திருப்பிக் கொடுத்த முன்னாள் தலைமை ஆசிரியர்.

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, தருமபுரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனது நல்லாசிரியர் விருதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சோலியனூர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. 2012 - 2013 ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் மாணவர்களின் மன வளர்ச்சி மற்றும் இடைநிற்றல் அதிகரிக்கும் என கூறி, பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அரசு கைவிட கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக தான் வாங்கிய நல்லாசிரியர் விருதுடன், கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் அளித்தார். நல்லாசிரியர் விருதை வாங்க மறுத்த மாவட்ட ஆட்சியர், ஆசிரியரின் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு அரசுக்கு அனுப்பி உரிய பதிலை பெற்றுத்தருவதாக கூறினார்.