சேலத்தில் கண்பார்வை குறைபாட்டை சாதகமாகப் பயன்படுத்தி பலரை நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி

சேலம் சூரமங்கலம் அடுத்த சின்ன அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த டேவிட், பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி. பேருந்துகளில் செல்லும் போதும், நடந்து செல்லும் போதும் கையில் சிறிய குச்சியை பிடித்து தட்டுத்தடுமாறி செல்வார். அப்போது பரிதாபப்பட்டு அவருக்கு உதவும் பெண்களின் கைகளைப்பிடித்து இன்பம் காண்பது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படி அழைத்துச் செல்லும் பெண்களிடம் மெல்ல பேச்சுக்கொடுக்கும் டேவிட், ஆஸ்திரேலியாவிலுள்ள ரெனால்ட் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கொக்கி போடுவான். அவரது பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்து விட்டு செல்லும் பெண்களை விட்டுவிடுவான். ஆர்வமாகக் காது கொடுக்கும் பெண்களிடம் கூடுதலாகக் கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு செல்போன் எண்ணையும் வேலை வாங்கித் தருவதாக லட்சக் கணக்கில் பணத்தையும் கறந்துவிடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்தப் பணத்தை வைத்து பல்வேறு ஊர்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளான் டேவிட் என்கின்றனர் போலீசார். அவர்களுக்கு தேவையான நகைகள் மற்றும் புடவைகள், இரண்டு சக்கர வாகனங்களை டேவிட் வாங்கி கொடுத்து குடும்பமே நடத்தி வந்துள்ளான் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பெண்களிடம் மட்டுமல்லாது ஆண்களிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளான் என்றும் போலீசார் கூறுகின்றனர். அப்படி அதே பகுதியைச் சேர்ந்த அஷரப் அலி என்பவரிடம் 4 லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்த நிலையில் அவர் போலீசில் புகாரளிக்க, டேவிட்டின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இப்படி இதுவரை 62 பேரிடம் 50 லட்ச ரூபாய்க்கும் மேல் டேவிட் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அஷரப் அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் டேவிட் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. “அய்யோ பாவம் அப்பாவி” என்றெண்ணி டேவிட்டுக்கு உதவி செய்தவர்கள் “அடப்பாவி” என புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற நபர்களை அகக் கண்களால் அடையாளம் கண்டு கவனத்தோடு செயல்பட வேண்டும் என்கின்றனர் போலீசார்.....