நகர மக்களை ஆச்சர்யப்பட வைத்த இஸ்லாமியர்களின் போராட்டம்...!

திருவண்ணாமலை மாவட்டம். மற்ற மாவட்டங்களை போல் இந்த மாவட்ட மக்கள் எந்த விவகாரத்துக்கும் உணர்ச்சி வசப்படமாட்டார்கள். அதனால் கொலை, கொள்ளை, ரவுடிஸம் என்பது மிக குறைவு. அதற்கு மற்றொரு காரணம் கிராமங்கள் நிறைந்த மாவட்டம் திருவண்ணாமலை இதுவும் ஒருக்காரணம். அப்படிப்பட்ட மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரேயிடத்தில் அணி திரண்டு மத்தியரசுக்கு எதிராக குரல் எழுப்பியது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கம், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அகதியாக வரும் இஸ்லாமியர்கள் மட்டும்மல்லாமல், உள்நாட்டிலேயே உள்ள இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் நடத்தப்படுகிறது. அதனை ஒடுக்க வேண்டும் என மத்தியரசு, மாநில அரசுகளை வலியுறுத்த பல மாநில ஆட்சியாளர்கள் அதனை மறுத்துள்ளனர். குறிப்பாக கேரளா, ஜார்கண்ட், டெல்லி, ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என்றுள்ளார்கள். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கம் இதில் தீவிரம் காட்டுவதால் போராட்டமும் தீவிரமாக நடந்துவருகிறது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு போராடுவது மத்திய - மாநில அரசுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை நகரில் டிசம்பர் 31ந்தேதி காலை நகரத்தின் 9 சாலைகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் வந்தனர். அவர்கள் அண்ணா சிலை முன் கூடி, மத்திய பாஜக அரசையும், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள அதிமுக அரசையும் கண்டித்து கண்டன குரல்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் குடியரிமை சட்டத்துக்கு எதிராக போராடும் அனைத்து கட்சிகளும் கலந்துக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தனர். அண்ணா சிலை முன்பு போராட்டத்துக்கு சென்ற இஸ்லாமியர்களின் ஒழுங்கை பார்த்து திருவண்ணாமலை நகர மக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டு போயினர்.