திருமுல்லைவாயல் - காவல் நிலையத்தில் ஓர் இரவு...

காவல் நிலையம் என்றாலே பலருக்கும் நெஞ்சுக்குள் திகில் பற்றிக்கொள்ளும். காவல் துறையினரின் நடவடிக்கைகள், செயல்பாடுகளும் பல சமயங்களில் அந்த வகையிலேயே அமைந்துவிடுவதுடன், கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகின்றன. மனிதாபிமானம் இல்லாத இடமாகவும் உருவகப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக, திரைப்படங்களில் போலீஸ் நிலையம் என்றாலே முரட்டுத்தனமும், முறைகேடுகளும், லஞ்ச லாவண்யம் நிறைந்த இடமாக காட்டப்படுகிறது. சில திரைப் படங்களை தவிர்த்து, பெரும்பான்மையான திரைப்படங்களில் காவல் துறையினரின் செயல்பாடுகள் மனிதாபிமானம் இல்லாத வகையிலேயே சித்தரிக்கப்படுகின்றன. - இதற்கு தக்கவாறு காவல் துறையினரின் செய்கைகளும் சில வேலைகளில் அமைந்துவிடுகின்றன. ஆனால், இப்போது படிக்கப்போகும் செய்தி நிச்சயம் இந்த பிம்பத்தை மாற்றும் என்று நம்பலாம். வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயில்கள் பற்றி கூகுளில் தகவல் தேடும்போது, ஏற்கனவே அங்கு சென்றவர்கள் அந்த இடத்தை பற்றிய குறிப்புகள், படங்கள் மற்றும் இதர விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பகுதி உள்ளது. கூகுள் ரிவியூ என்ற பகுதியில் குறிப்பிட்ட இடம், நிறுவனம் பற்றிய உண்மையானத் தகவல்கள், படங்கள், நடைமுறை பிரச்னைகளை பொதுமக்கள் பகிர்ந்து கொள்ள முடியும். அந்த இடத்தை தேடும் பிறருக்கு, இந்த தகவல்கள் மற்றும் விமர்சனப் பகுதியானது பலருக்கும் பெரிதம் பயனுள்ளதாகவும் அமைந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதியிலுள்ள திருமுல்லைவாயில் டி-10 காவல் நிலையம் குறித்து கூகுள் ரிவியூ பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு செய்தி எல்லோரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்திருப்பதுடன், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருமுல்லைவாயில் டி-10 காவல் நிலையம் பற்றி கூகுள் ரிவ்யூ பகுதியில் லோகேஸ்வரன் என்பவர் தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார். இதுதான் தற்போது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து வைரலான விஷயமாக மாறி இருக்கிறது. இரவு நேரத்தில் பைக்கின் உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்றதால், போலீசார் கைது செய்து இந்த காவல் நிலையத்தில் வைத்தனர். காவல் நிலையம் மிகவும் தூய்மையாக இருந்ததுடன், பிரதான சாலையிலும் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணிபுரிபவர்கள் மிகவும் கனிவாகவும், எந்த ஒரு துன்புறத்தலையும் தரவில்லை . உரிய ஆவணங்களை அளித்தவுடன் என்னிடம் விபரங்கள் மற்றும் விரல் ரேகையை பதிவு செய்து கொண்டு லஞ்சம் எதுவும் பெறாமல் விடுவித்தனர் என்று பதிவு செய்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், அவர் கடைசி வரியில் குசும்புத்தனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். அதாவது, வாழ்க்கையில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எங்களது பரம்பரை போலீஸ் ஸ்டேஷன் படி மிதிக்காத பரம்பரை என்று சொல்பவர்கள் கூட இந்த காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மூலமாக தங்களது கூற்றை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்பலாம். கூகுள் ரிவியூ பகுதியில் திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு 18 பேர் தர மதிப்பீடு கொடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமான 5 என்ற நட்சத்திர மதிப்பீட்டிற்கு 3.7 என்ற நட்சத்திர மதிப்பீட்டை இந்த காவல் நிலையம் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 5 பேர் முழுமையான திருப்தியை தெரிவிக்கும் விதத்தில், 5க்கு 5 என்ற நட்சத்திர மதிப்பீட்டையும், 4 பேர் 4 நட்சத்திர மதிப்பீட்டையும் வழங்கியுள்ளனர். இதனிடையே, லோகஸ்வரன் என்ற நபரை கைது செய்த சம்பவமே நடக்கவில்லை என்று திருமுல்லை வாயில் காவல் நிலைய தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.