மலேசியாவில் தமிழரின் ஓட்டலில் சித்ரவதை- ரத்த காயத்துடன் திரும்பிய இளைஞர்

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் (27). சென்னையில் செய்தியாளர்களிடம் இவர் நேற்று கூறியதாவது: மலேசியாவில் கார் கழுவும் வேலைக்காக சென்றேன். அந்த வேலை பிடிக்காததால், ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.


அந்த ஓட்டல் உரிமையாளர் தேவக்கோட்டை கண்டதேவி பகுதியை சேர்ந்தவர். முதல் 2 மாதங்கள் ஒழுங்காக சம்பளம் கொடுத்தனர். அதன் பிறகு மூன்றரை மாதங்களாக சம்பளம் தரவில்லை. இதனால், வேறு வேலைக்கு செல்வதாக கூறி, என் உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். உடனே ஓட்டல் நிர்வாகிகள் 2 பேர் என்னை ஒரு அறைக்கு இழுத்துச் சென்று கட்டையாலும், பைப்பாலும் சரமாரியாக அடித்து, உதைத்தனர். சுமார் 3 மணி நேரம் தாக்கியதில் மயங்கிவிட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, என் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. தட்டுத் தடுமாறி அந்த அறையில் இருந்து வெளியே வந்தேன்.


அப்போது, அருகே இருந்த ஒருவர் என்னை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார். சிறிதுநேரத்தில், மலேசிய போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். அடுத்த சில நாட்களில் ஓட்டல் நிர்வாகிகள் என்னை விமானத்தில் ஏற்றி, சென்னைக்கு அனுப்பினர். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய என்னை ஓட்டல் உரிமையாளரின் ஆட்கள் சாலிகிராமத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.


என் உடலில் ரத்த காயம் இருப்பது வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்பதால், காயம் ஆறும்வரை தேவக்கோட்டைக்கு செல்லக் கூடாது என்று கூறி, அங்கேயே என்னை அடைத்து வைத்தனர். உறவினர்கள், ஜமாத் நிர்வாகிகள் உதவியுடன் அங்கிருந்து தப்பி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீஸார் என்னை தேவக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். என்னை அடித்து துன்புறுத்திய ஓட்டல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, எனது மூன்றரை மாத சம்பள பாக்கியை வாங்கித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பின் நிர்வாகி பொன்குமார் இந்த சம்பவம் குறித்து கூறியபோது, ‘‘சம்பள பாக்கியைக் கேட்ட தொழிலாளியை அடித்து சித்ரவதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி வருவாய் இந்தியாவுக்கு வருகிறது. அந்த தொழிலாளர்களின் நலன் காக்க அங்குள்ள தூதரகங்கள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!